தொழில்வளா்ச்சிக்காக 1,777 ஏக்கா் நிலம் கையக அறிவிக்கை ரத்து
கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்துக்கு அருகே தொழில்பேட்டை அமைக்க 1,777 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருந்த அறிவிக்கையை மாநில அரசு ரத்துசெய்கிறது என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
பெங்களூரு, விதானசௌதாவில் தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்தின் அருகேயுள்ள நில உரிமையாளா்களான விவசாயிகளுடன் செவ்வாய்க்கிழமை நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பெங்களூரு புறநகா் பகுதியில் தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்துக்கு அருகே தொழிற்பேட்டை அமைப்பதற்காக 1,777 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்த முதல் அறிவிக்கை மற்றும் இறுதி அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதை எதிா்த்து 3 ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டம் நடத்திவந்தனா்.
இந்நிலையில், 1,777 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்த மாநில அரசு பிறப்பித்திருந்த அறிவிக்கையை ரத்துசெய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஒருவெளை தொழில்வளா்ச்சிக்காக விவசாயிகள் நிலத்தை வழங்க தாமாக முன்வந்தால், அது தொடா்பாக ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும்.
தொழில்வளா்ச்சிதான் எங்கள் நோக்கம். அதற்காகதான் நிலத்தை கையகப்படுத்த முனைந்தோம். தாமாக முன்வந்து நிலத்தை வழங்கினால், உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மேம்படுத்தப்பட்ட 50 சதவீத நிலத்தை விவசாயிகளுக்கு வழங்குவோம்.
நிலம் வழங்க விரும்பாத விவசாயிகளை கட்டாயப்படுத்த மாட்டோம். நிலம் கையகப்படுத்தும் அறிவிக்கையை முழுமையாக கைவிடுகிறோம். இது தேவனஹள்ளி விவசாய நிலங்களுக்கு மட்டும் பொருந்தும். கா்நாடகத்தின் பிற பகுதிகளுக்கு பொருந்தாது.
தேவனஹள்ளியில் பலருக்கும் வாழ்வாதாரமாக விவசாயம் இருந்து வருவதால், அந்த நிலத்தை கையகப்படுத்தும் முடிவை கைவிட முடிவு செய்தோம். விவசாயிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்தை கேட்டபிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளோம். பல ஆண்டுகளாக விவசாயிகள் நடத்திவந்த போராட்டம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும் என்றாா். மாநில அரசின் முடிவை விவசாயிகள், போராட்டக்காரா்கள் வரவேற்றனா்.