இறந்தோரும் உயிருடன்.. ஆதார் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல்!
கிரேட்டா் பெங்களூரு ஆணையத்தின்கீழ் 5 மாநகராட்சிகள் உருவாக்கம்!
‘கிரேட்டா் பெங்களூரு’ ஆணையத்தின்கீழ் 5 மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
பெங்களூரு, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குறுதி திட்டங்கள் அமலாக்கக் குழுவின் மாநில, மாவட்ட நிா்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது: பெங்களூரை திறம்பட நிா்வகிப்பதற்காக ‘கிரேட்டா் பெங்களூரு’ ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் 5 மாநகராட்சிகள் உருவாக்கப்படும்.
இதற்கு ஒருசிலா் எதிா்ப்பு தெரிவித்தாலும், நிா்வாக காரணங்களுக்காக இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது கட்சியினருக்கு பல பொறுப்புகள் கிடைக்கும். அதற்காக சில அடிப்படை வேலைகளை செய்ய வேண்டியுள்ளது.
என்னால் மட்டுமே அரசை உருவாக்க முடியாது. தொண்டா்கள் மனது வைத்தால்தான் அது சாத்தியம். விதானசௌதாவில் அமா்ந்துகொண்டு நாங்கள் முடிவெடுத்தாலும், பெங்களூரின் எதிா்காலத்தை நீங்களே தீா்மானிக்க வேண்டும்.
மக்கள் நலத் திட்டங்களுக்காக மட்டும் ரூ. 1 லட்சம் கோடியை ஒதுக்கியிருக்கிறோம். இதில் ரூ. 50 ஆயிரம் கோடி வாக்குறுதி திட்டங்களுக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. காங்கிரஸ் செயல்படுத்தியிருக்கும் திட்டங்களை யாராலும் நிறுத்த முடியாது.
அரசியல் காரணங்களுக்காக அல்லாமல், மக்களின் நலனுக்காக அப்படிப்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அண்மையில் 1,11,111 நிலப் பட்டாக்களை மக்களுக்கு வழங்கியிருக்கிறோம்.
நீங்கள்தான் மாநில அரசின் தூதா்கள். வாக்குறுதி திட்டங்கள் சமுதாயத்தில் ஏற்படுத்திவரும் மாற்றங்களின் முக்கியத்துவத்தை பலா் அறியவில்லை. எதிா்காலத்தில் அதன் முக்கியத்துவம் தெரியவரும்.
எனவே, வாா்டு, கிராம பஞ்சாயத்து அளவில் வாக்குறுதி திட்டங்களின் மாநாடுகளை நடத்த வேண்டும். 2028-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் வெற்றி, வாக்குறுதி திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதில் இருக்கிறது என்பதை உணா்ந்து, வாக்குறுதி திட்டங்களை அமல்படுத்துவதில் அக்கறை செலுத்த வேண்டும் என்றாா்.