தோனி வழிநடத்திய இளம் வீரர்கள்; 'UNBEATEN DHONI'S DYNAMITES' நிகழ்ச்சியை வெளியிட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராஃபியில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்தான விக்கெட் கீப்பர் MS தோனி வழிநடத்திய இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி கோப்பை வென்று சாதனை நிகழ்த்தியது.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் நிறைவான நிலையில் அந்த வெற்றியினையும், அதற்கு வழிநடத்திய கேப்டன் தோனியையும் கௌரவிக்கும் விதமாக 'UNBEATEN DHONI'S DYNAMITES' என்ற நிகழ்ச்சி ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய வீரர்கள் பியூஷ் சாவ்லா, ஆகாஷ் சோப்ரா, சஞ்சய் மஞ்ரேக்கர் மற்றும் வெற்றி பெற்ற அணியில் இடம்பெற்ற சுரேஷ் ரய்னா, தினேஷ் கார்த்திக் முதலியோர் அணி குறித்தும் தங்கள் அனுபவம் குறித்தும் பகிர்ந்துக் கொண்டனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/s9l69lmh/2013.jpg)
2011-ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் தோல்வியைத் தழுவியது. இந்தியாவின் ஆஸ்தான மற்றும் பலம்வாய்ந்த முதல் மூன்று பேட்டிங் வரிசையான சச்சின், சேவாக், கவுதம் கம்பீர் அந்த அணியில் இல்லை. மேலும் அணியில் பல இளைஞர்கள் இடம்பெற்றதும் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. மிகுந்த அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்பில் களமிறங்கிய இந்திய அணி முதல் போட்டியிலேயே அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.
லெஃப்ட் - ரைட் காம்பினேஷனில் களமிறங்கிய ரோகித்-தவான் ஓப்பனிங், வலுவான பௌலிங் குழு, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா -பாகிஸ்தான் மேட்ச்சின் வெற்றி என அந்த தொடரின் ஒவ்வொரு முக்கியமான விஷயங்களையும் ஆவணப்படுத்துகிறது இந்த நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் ஹைலைட் சாம்பியன்ஸ் டிராஃபியின் இறுதிப் போட்டி குறித்து விரிகிறது. திடீரென பெய்த மழை, அதனால் 20 ஓவர்களாக மாறிய போட்டி, எதிர்பாராத ரோகித் சர்மாவின் விக்கெட், அதனை பின் தொடர்ந்த விராட் கோலியின் அதிரடி 43 ரன்கள், பின்பு களமிறங்கிய இங்கிலாந்தின் பார்ட்னர்ஷிப், இந்திய பௌலர்கள் நிகழ்த்திய விக்கெட் வித்தைகள் என அனைத்து தருணங்கள் குறித்தும் நிகழ்ச்சியில் பேசிய வீரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/po8ry2vo/p38nlu98ms-dhoni-2013-champions-trophy-afp625x30023June22.jpg)
இறுதியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியின் வெற்றியில் அனைவரின் பங்கும் இருந்தாலும், தோனியின் தலைமை அதில் மிக முக்கியமானது. முற்றிலும் புதிய இளம் அணியை ஏற்றது, ரோகித் சர்மாவை ஓப்பனராக களமிறக்கியது, ஓவர் தீர்மானிப்பது, ரன்கள் அள்ளித்தந்த இஷாந்த் சர்மா விக்கெட் எடுத்தது, ஸ்பின்னர்களுக்கு இறுதி இரண்டு ஓவர்கள் அளித்தது என பல இடங்களில் தோனியின் தலைமை வெற்றிக்கு வழிவகை செய்தது.
அதனால் தான் அந்த வெற்றி குறித்த அந்த நிகழ்ச்சிக்கு' UNBEATEN DHONI'S DYNAMITES' என்று பெயரிட்டுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் அணியில் இருந்த வீரர் குறித்து பேசும்போது, அதனை முடிவு செய்த தோனி குறித்தும் ஒவ்வொரு இடத்திலும் பேசியது குறிப்பிடத்தக்கது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/e8ozucqe/dd6a0dde1a509cd37d0f5a9d16c84f82.jpg)
இந்த நிகழ்ச்சி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருக்கிறது.