விமானப் படையின் மகா கும்பமேளா இது: விமான கண்காட்சியை துவக்கி வைத்த ராஜ்நாத்!
Rohit Sharma: `கதை இன்னும் முடியல...' - வந்தார் ரோஹித்; இது ஹிட்மேனின் கம்பேக்!
ரோஹித்தின் கரியரில் அவர் சில காலக்கட்டங்களையும் சில இடங்களையும் மறக்கவே மாட்டார். இரட்டைச்சதம் அடித்த மைதானங்கள், 2023 ஓடிஐ உலகக்கோப்பை, 2024 டி20 உலகக்கோப்பை என அந்தப் பட்டியலில் இப்போது கட்டாக் மைதானத்தையும் இணைத்துக் கொள்ளலாம்.
ஆம், அவரது கரியர் பெருத்த விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் வேளையில் அவர் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கட்டாக் மைதானத்தில் மிக முக்கியமான சதத்தை எட்டியிருக்கிறார். அற்புதமான இன்னிங்ஸ். சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக ஃபார்முக்கு திரும்பி இந்திய அணிக்கு புது தெம்பையும் கொடுத்திருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/7co41b0p/Snapinst.app476304840184885261540045661307866127897562115n1080.jpg)
ரோஹித்தின் கரியரில் கடந்த 6 மாதங்கள் மிகக் கொடூரமானவை. டி20 உலகக்கோப்பையை தோனிக்குப் பிறகு இந்திய அணிக்காக வென்று கொடுத்தார். ஆனால், அந்த மகத்தான வெற்றி கொடுக்கும் சௌகரியத்தை அவரால் அனுபவிக்கவே முடியவில்லை. காரணம், அடுத்தடுத்த தோல்விகள். இலங்கைக்கு சென்று அங்கே ஓடிஐ தொடரை இழந்து வந்தார்கள். உள்ளூரில் நியூசிலாந்துக்கு எதிராக ஒயிட் வாஷ். பார்டர் கவாஸ்கர் தொடரில் மோசமான தோல்வி. இந்த எல்லா தோல்விகளிலும் ரோஹித்தும் சறுக்கியிருப்பார். ஒரு பேட்டராக அவரிடம் எதிர்பார்த்த ஆட்டங்கள் வெளிப்படவே இல்லை. மிக மிக எளிதாகத் தன்னுடைய விக்கெட்டை தாரை வார்த்துவிட்டு சென்றார். அணிக்குள் ரோஹித்தின் இடமும் கேள்விக்குறியானது. பிசிசிஐ யுமே ரோஹித்தின் விஷயத்தில் கறாராக யோசிக்க ஆரம்பித்தது. சாம்பியன்ஸ் டிராபியுடன் பிசிசிஐ ரோஹித்தைத் தாண்டி யோசிக்கும் என்பதே சமீபத்திய தகவலாக இருந்தது.
இப்படியொரு நிலையில்தான் இங்கிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடருக்கு வந்தார் ரோஹித். நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் சோபிக்கவில்லை. மிக மோசமாக ஆடினார். 7 பந்துகளில் வெறும் 2 ரன்கள். பார்டர் கவாஸ்கர் தொடரில் அவுட் ஆன விதங்களை ஞாபகப்படுத்தும் வகையில் மீண்டும் அவுட் ஆனார். மஹ்மூத்தின் பந்தில் அரைகுறையாக ஷாட் ஆடி டாப் எட்ஜ். ரோஹித்தின் மீதான நம்பிக்கை மீண்டும் குறைந்தது. ரோஹித்துமே அவரது கரியர் குறித்து குழப்பமான நிலையில்தான் இருந்தார். இந்த முதல் ஓடிஐ போட்டிக்கு முன்புமே கூட பத்திரிகையாளர் சந்திப்பில் அவரின் எதிர்காலம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஒருவித எரிச்சலுடனே பதில் கூறியிருந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/yoghhwx2/Snapinst.app476487929184885261360045664664516287935183768n1080.jpg)
தெளிவற்ற நிலையில்தான் கட்டாக்கில் இந்த போட்டியிலும் களமிறங்கினார். இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 304 ரன்களை எடுத்துவிட்டது. இந்தியாவுக்கு பெரிய டார்கெட். ரோஹித்திடமிருந்து நல்ல தொடக்கம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு. இன்று என்ன ஆனதோ தெரியவில்லை. கடந்த 6 மாதங்களில் நடக்காத ஒன்று நடந்தது. ரோஹித் அவர் மீதான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆடினார். அதாவது, பழைய ரோஹித்தாக ஆடினார். 2023 ஓடிஐ உலகக்கோப்பையில் ஒரு ஆட்டம் ஆடியிருப்பாரே. பவர்ப்ளேயில் அடித்து வெளுத்து அணிக்கு அட்டகாசமான மொமன்ட்டமை கொடுப்பாரே. அப்படியொரு ஆட்டம்.
அட்கின்சன் வீசிய இரண்டாவது ஓவரிலேயே ஒரு பவுண்டரியையும் சிக்சரையும் அடித்திருந்தார். அந்த சிக்சர் ஒரு ப்ளிக். மிட் விக்கெட்டில் கிட்டத்தட்ட 70 மீட்டரை கடந்த சிக்சர்.
'இது ஒரு அற்புதமான ஷாட். ரோஹித் நம்பிக்கையாக தெரிகிறார். கடந்த போட்டிகளில் இந்த ஷாட்டுக்கு முயன்றுதான் பல முற்சி அவுட் ஆகியிருக்கிறார். இன்று அதை மிகச்சிறப்பாக ஆடியிருக்கிறார்.' என கவாஸ்கர் வர்ணனையில் விதந்தோத தொடங்கினார். அந்த ஓவர் மட்டுமில்லை. அடுத்தடுத்த ஓவர்களிலுமே க்ளீன் ஹிட்டாக சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். கடந்த போட்டியில் ரோஹித்தை வீழ்த்திய மஹ்மூத்தின் ஓவரிலும் சிக்சர்களை பறக்கவிட்டார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/wkyy753r/20250209192738.jpg)
கவரில் ஒன்று லாங் ஆபில் ஒன்று என அவர் ஓவர்களில் அடித்த இரண்டு சிக்சர்களுமே அட்டகாசம். இடையில் சில நிமிடங்கள் மின் விளக்குகளின் பிரச்னையால் ஆட்டம் தடைபட்டது. அது ரோஹித்தின் மொமன்ட்டமை கெடுத்துவிடுமோ என தோன்றியது. அப்படி எதுவும் நடக்கவில்லை. இடைவேளைக்கு பிறகும் ரோஹித் கலக்கினார். அரைசதத்தைக் கடந்தார். ஒரு கட்டத்துக்குப் பிறகு ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளாக வீசி ஆட்டமிழக்க செய்ய முற்பட்டனர். அட்கின்சன் ஒரு ஓவர் முழுவதுமாக ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களாக வீசிக்கொண்டே இருந்தார். டீப் பைன் லெக்கில் பீல்டரும் இருந்தார். ரோஹித் அசரவில்லை. பேக்வர்ட் ஸ்கொயரிலும் பைன் லெகிலும் பவுண்டரியையும் சிக்சரையும் அடித்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/7vxwxz8p/20250209192714.jpg)
இதுதான் ரோஹித். இதுதான் ஹிட்மேன். அடீல் ரஷீத்தான் இந்திய பேட்டர்களை கடுமையாக திணற வைக்கிறார். ஆனால், ரோஹித் அவரின் ஓவரிலும் சிறப்பாக ஸ்வீப் ஷாட்களை ஆடினார். அவர் ஸ்லிப்பை வைத்து அட்டாக் செய்கையில்தான் லாங் ஆபில் சிக்சர் அடித்து சதத்தை நிறைவு செய்தார். ரோஹித்தின் 32 வது ஓடிஐ சதம் இது. 119 ரன்கள் எடுத்திருந்த நிலையில், லிவிங்ஸ்டன் பந்தில் பெரிய ஷாட் அடிக்க முயன்று அதில் ரஷீத்திடம் கேட்ச் ஆனார். அவர் வெளியேறியபோது அரங்கமே ரோஹித்... ரோஹித்... என கரகோஷம் எழுப்பியது.
நீண்ட காலம் கழித்து ரோஹித்திடமிருந்து ஒரு நிறைவான இன்னிங்ஸ். சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக சரியான சமயத்தில் பார்முக்கு வந்திருக்கிறார். வாழ்த்துகள் ஹிட்மேன்!