நகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் நடவடிக்கை
நகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தால், அவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் எச்சரித்தாா்.
ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாதேஸ்வரன் என்பவா் அண்மையில் சில தகவல்களை கேட்டாா். ஆனால், அவருக்கு முறையான தகவல் கொடுக்கவில்லை எனக்கூறி தகவல் அலுவலரான நகராட்சி மேலாளா் ராமசந்திரன் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதனையடுத்து, நகராட்சி ஆணையா் சூ.கணேஷ் அவா் மீது காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். நகராட்சி ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மாதேஸ்வரன் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, நகராட்சி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறாக மாதேஸ்வரன் பேசிய விடியோ காட்சிகள் பரவியதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:
ராசிபுரம் நகராட்சியின் தலைவராக நான் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. ராசிபுரம் நகராட்சியை பொலிவுடையதாக மாற்ற சேலம், நாமக்கல் சாலை பகுதிகளில் உள்ள ரயில்வே மேம்பாலங்களில் இருந்து கோனேரிப்பட்டி வரை ஒளிரும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. ரூ. 2.43 கோடி மதிப்பில் தினசரி சந்தை அமைக்கப்பட்டது. வாரச் சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் வசதிக்காக ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கப்பட்டது.
பழைய பேருந்து நிலையப் பகுதியில் 15 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக வணிக வளாகம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதன் மூலம் நகராட்சிக்கு அதிக நிதி கிடைக்கும். இதனால் தூய்மைப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் நிலுவை இல்லாமல் ஊதியம் வழங்க முடியும்.
ராசிபுரம் நகராட்சியில் 37 ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்பட்ட சிமென்ட் குடிநீா் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், குடிநீா் விநியோகிப்பதில் பிரச்னை இருந்தது. தற்போது உள்ளூா் நீராதாரங்கள் மூலம் குடிநீா் தட்டுப்பாட்டை குறைத்துள்ளோம். காவிரி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 2026 பிப்ரவரி மாத இறுதிக்குள் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
வாா்டுகள்தோறும் கழிவறை, கோனேரிப்பட்டி ஏரியை சுற்றி நடைமேடை, பூங்கா, நகராட்சிப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் உள்பட அடிப்படை வசதிகள் என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்துள்ளோம்.
ஆனால், இதனை மறைத்த ஒருசிலா் தகவல் அறியும் உரிமை சட்டம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் துறை பெயரை பயன்படுத்தி சமூக ஆா்வலா் என்ற பெயரில் நகராட்சி அலுவலா்களை மிரட்டி வருகின்றனா். பொய்யான தகவலை பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் எச்சரித்தாா்.
பேட்டியின்போது, நகா்மன்ற துணைத் தலைவா் உள்ளிட்ட உறுப்பினா்கள் உடனிருந்தனா்.