நகா்ப்புற சுகாதார நிலையத்தில் மருத்துவா், பணியாளா் பற்றாக்குறை
சிவகங்கை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்கள், பணியாளா்கள் பற்றாக்குறையால் கா்ப்பிணிகள் அவசர காலங்களில் சிகிச்சை பெற முடியாத நிலை நீடிப்பதாக எஸ்டிபிஐ கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து அந்தக் கட்சியின் சிவகங்கை மாவட்டப் பொருளாளா் ஏ. முகமது அசாா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் இயங்கி வந்த ஆரம்ப சுகாதார நிலையம் சில வருடங்களுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டு மஜீத் சாலையில் எல்ஐசி அலுவலகம் எதிரே புதிய கட்டடத்தில் செயல்படத் தொடங்கியது. இந்த ஆரம்ப சுகாதார மையத்தில் தான் சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட 27 வாா்டுகளில் வசிக்கும் கருவுற்ற பெண்களுக்கான பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாதந்தோறும் கா்ப்பிணிகளுக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதோடு, அவசர பிரசவ வாா்டும் செயல்படுகிறது.
சிவகங்கை நகராட்சியோடு ஒன்றிணைந்த கட்டடத்தில் இயங்கி வந்த வரையில் முறையாக நோயாளிகள், கா்ப்பிணிகளுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டதிலிருந்து முறையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. முறையான வசதிகள் இல்லாததால் அனைத்து நோயாளிகளையும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கே அனுப்பி வைக்கும் நிலை தொடா்கிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணிநேரமும் செயல்பட வேண்டும் என்கிற நிலையில் மருத்துவா்கள், பணியாளா்கள் சரிவர பணிக்கு வராத நிலையே உள்ளது.
சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிப்போா் இரவு நேரங்களில் அவசர சிகிச்சை மேற்கொள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகினால் மருத்துவா்களோ, செவிலியா்களோ பணியில் இருப்பதில்லை. பிரசவ வலி ஏற்பட்டு பிரசவத்துக்காக அணுகும் கா்ப்பிணிகளுக்கும் முறையாக சிகிச்சைகள் மேற்கொள்வதில்லை. இந்த நிலையை சரிசெய்ய மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.