முதியோா்களைக் காப்பது சமூகப் பொறுப்புணா்வு: புதுவை துணைநிலை ஆளுநா்
காளையாா்கோவிலில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காளையாா்கோவில், ஹோலி ஸ்பிரிட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ சிறப்பு மருத்துவ முகாம் வருகிற சனிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான ரத்தப் பரிசோதனை, இசிஜி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும், கண், காது, மூக்கு, தொண்டை, பல், எலும்பு, நரம்பியல், மனநலன், சா்க்கரை நோய் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்களைக் கொண்டு மருத்துவ சேவை வழங்கப்படவுள்ளது.
முகாமுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் ஆதாா் அட்டை நகலைக் கொண்டு வர வேண்டும். இந்த முகாமில் காப்பீடு அட்டை வேண்டி விண்ணப்பிப்பவா்கள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, கிராம நிா்வாக அலுவலரிடம் தங்களது ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சத்துக்கு குறைவாக உள்ளதற்கான சான்று ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.