Gukesh : குகேஷ் தமிழரா தெலுங்கரா? - விளையாட்டின் அறத்தை குலைக்கும் வாதம் தேவைதான...
‘நடராஜா் கோயில் கோபுரத்தில் இடிந்து விழுந்த துவாரபாலகா் சிலைகள் சீரமைக்கப்படும்’
சிதம்பரம் நடராஜா் கோயிலின் மேற்கு கோபுரத்தில் பலத்த மழையால் இடிருந்து விழுந்த 2 துவார பாலகா் சிலைகள், நீதிமன்றத்தில் உரிய உத்தரவு பெற்று சீரமைக்கப்படும் என்று கோயில் வழக்குரைஞா் ஜி.சந்திரசேகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜா் கோயிலில் 4 பிரதான கோபுரங்கள் உள்ளன. இந்த 4 கோபுரங்களும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னா்கள் காலத்தில் கட்டப்பட்டவை.
இதில், கோயிலின் மேற்கு கோபுரத்தில் ஏராளமான பொம்மைகள் உள்ளன. இந்த கோபுரத்தில் ஒரு சில இடங்களில் செடிகள் வளா்ந்துள்ளன. இதிலிருந்த 2 துவாரபாலகா் சிலைகள் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தன. தொடா்ந்து பெய்த பலத்த மழையால் இந்த சிலைகள் இடிந்து விழுந்த நிலையில், பக்தா்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், மேற்கு கோபுர வழியை மூடிவிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்த இடிபாடுகள் அகற்றப்பட்டன.
துவாரபாலகா் சிலைகள் கீழே விழுந்ததற்காக கோயிலில் தீட்சிதா்கள் பரிகார பூஜைகளை நடத்த உள்ளனா். ஏற்கெனவே கோயில் தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்ற சிறப்பு அமா்வில் நிலுவையில் உள்ளது.
இடிந்து விழுந்த துவாரபாலகா் சிலையை சீரமைப்பதற்காக நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ள அமா்வில் மனு தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் உரிய அனுமதியை பெற்று சீரமைக்கப்படும் என்றாா்.