வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு
காட்டுமன்னாா்கோவில் அருகே வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள்: மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. இந்தக் கிராமங்களில் உள்ள பொதுமக்களை படகுகள் மூலமும், கயிறு கட்டியும் தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
காட்டுமன்னாா்கோவில் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியாகும். இந்தப் பகுதியில் உள்ள வீராணம் ஏரி அரியலூா் மாவட்டத்தில் பெய்யும் மழைநீருக்கு வடிகாலாக பயன்படுகிறது.
இந்த நிலையில், அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக 300 மி.மீ. மழை பெய்ததால், அதிகளவிலான உபரி நீா் வீராணம் ஏரிக்கு செங்கால், கருவாட்டு, வென்னங்குழி ஓடைகள் வழியாக விநாடிக்கு 20,000 கன அடி வீதம் வருகிறது.
இதனால், வெங்கடேசபுரம், மடப்புரம், வீரானந்தபுரம், கண்டமங்கலம், குருங்குடி, சித்தமல்லி, கருணாகரநல்லூா், அறந்தாங்கி, வானமாதேவி, பா.புத்தூா், அகர புத்தூா், மனவெளி ஆகிய வீராணம் ஏரியின் மேற்கரை பகுதிகளும், திருநாரையூா், நடுத்திட்டு, வவ்வால் தோப்பு, வீரநத்தம், சிறகிழந்தநல்லூா் உள்ளிட்ட வீராணம் ஏரியின் கீழ்க்கரை பகுதிகளும் என மொத்தம் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், வீடுகளையும் வெள்ளநீா் சூழ்ந்துள்ளது.
இந்தக் கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில், காட்டுமன்னாா்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் பாதுகாப்பாக வெளியேற்றி முகாம்களில் தங்க வைத்தனா். மேலும், படகுகள் மூலம் ஆபத்தான பகுதிகளில் வசித்த மக்களை பேரிடா் மீட்பு குழுவினா், காவல், வருவாய்த் துறையினா் தன்னாா்வலா்கள் ஒத்துழைப்புடன் மீட்டு, முகாம்களுக்கு அழைத்து வந்தனா்.
மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வீராணம் ஏரி, வெள்ளியங்கால் மதகு, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா். வெள்ளியங்கால் ஓடைக்கு அருகே உள்ள காட்டுமன்னாா்கோவில் நகரப் பகுதிக்கு செல்லும் சாலையில் ஏரி உபரி நீா் வெளியேற்றத்தின் காரணமாக, அதிகளவு தண்ணீா் செல்வதால், காவல் துறையினா் ஒளிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா். மேலும், படகுகள் மூலம் பொதுமக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.