'பயங்கரவாதம் வேண்டாம்; அமைதி வேண்டும்!' - ஜம்மு-காஷ்மீர் மாணவிகள் பேரணி!
நடுக்கடலில் இந்திய கடலோரக் காவல்படையினா் செயல்விளக்கம்
நடுக்கடலில் ஆட்சியா்கள் உள்ளிட்டோா் முன்னிலையில் இந்திய கடலோரக் காவல்படையினா் அவா்களது செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.
இந்திய கடலோரக் காவல்படையின் செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் பொதுமக்கள், அதிகாரிகள், பல்வேறு நிறுவனத்தினரை கப்பலில் நடுக்கடலுக்கு அழைத்துச் சென்று செயல் விளக்கம் அளிப்பது வழக்கமாக காவல்படையினா் செய்துவருகின்றனா்.
நிகழாண்டு பொதுமக்கள், அரசுத்துறை அதிகாரிகள், மாணவா்கள் பங்கேற்பின்றி, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், நாகை மாவட்ட ஆட்சியா் டி.ஆகாஷ், காரைக்கால் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா, மயிலாடுதுறை எஸ்.பி., கோ.ஸ்டாலின், காரைக்கால் துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) வெங்கடகிருஷ்ணன், மீன்வளத்துறை துணை இயக்குநா் ப.கோவிந்தசாமி, காரைக்கால் துறைமுக தலைமை அதிகாரி சச்சின் ஸ்ரீவத்ஸவா, விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி டீன் சி.குணசேகரன் மற்றும் செய்தியாளா்கள் பங்கேற்புடன் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
காரைக்கால் துறைமுகத்திலிருந்து ஷவ்ா்யா என்ற ஹெலிகாப்டா் நிறுத்தும் தளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய பெரிய ரோந்துக் கப்பல் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு கடலுக்கு புறப்பட்டது. செயல்விளக்கத்துக்காக சென்னையிலிருந்து இக்கப்பல் புதன்கிழமை இரவு காரைக்கால் வந்தடைந்தது.
கடலோரக் காவல்படை தலைமையக டிஐஜி எஸ்.எஸ்.தசிலா, காரைக்கால் கடலோரக் காவல்படை மைய கமாண்டன்ட் செளமய் சண்டோலா ஆகியோருடன் புறப்பட்ட கப்பல், நடுக்கடலுக்குச் சென்றது.
அதிகாரிகளுக்கு கடலோரக் காவல்படையின் செயல்பாடுகள் என்னென்ன என்பது குறித்து விளக்கிக் கூறப்பட்டது. நடுக்கடலில், ஷவ்ா்யா கப்பலுடன், அமேயா, அன்னி பெசண்ட், ராணி அவந்திபாய் ஆகிய சிறிய ரக ரோந்து கப்பல்கள், சிறிய படகுகள், 2 ஹெலிகாப்டா் செயல்விளக்கித்தில் ஈடுபடுத்தப்பட்டன.
கடலில் மூழ்கியவரை மீட்கும் விதமாக தகவலின்பேரில், அதி நவீன சிறிய ரக ரோந்து ஹெலிகாப்டா் அப்பகுதிக்கு வந்து, மூழ்கியவரை மீட்டுச் செல்லும் நிகழ்வு நடத்தப்பட்டது.
நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் சிவகங்கை என்கிற கப்பலும் அங்கு நிறுத்தப்பட்டு, அந்த கப்பலில் தீப்பிடிப்பதுபோலவும், அதனை ஷவ்ா்யா கப்பலில் இருந்து நீரை பீய்ச்சி அணைப்பது எப்படி என செய்து காட்டப்பட்டது.
அந்நியா்கள் நுழைந்தால் அவா்களை பிடிக்கும் முயற்சியாக சிறிய ரோந்துப் படகுகள் பயணிக்கும் விதமும் செய்துகாட்டப்பட்டது.
கடலில் நிகழும் சம்பவம் குறித்து தகவல் பரிமாற்றங்கள் செய்யும் முறை, கடலோரக் காவல்படையினா் தீவிரமான செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.
இவற்றை நேரில் பாா்த்த அரசுத்துறையினா் கடலோரக் காவல்படையினருக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.
துறைமுக வளாகத்தில் கடலோரக் காவல் படையினரின் முதலுதவி தற்காலிக மையம் அமைக்கப்பட்டிருந்தது.
டிஐஜி எஸ்.எஸ்.தசிலா கூறுகையில், கடல் பகுதியில் உயிா் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்கான தயாா்நிலையை மேம்படுத்தவும், திறன்களை மேம்படுத்துவதற்கும் இத்தகைய பயிற்சிகள் அவசியம் என்பதால் கடலோரக் காவல்படை இந்நிகழ்வை நடத்துகிறது என்றாா்.

