தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்...
நாகா்கோவிலில் லஞ்சம் வாங்கிய மருந்து தர ஆய்வாளா் கைது
நாகா்கோவிலில் மருந்தகம் அமைப்பதற்காக ஒப்புதல் வழங்க ரூ. 10,000 லஞ்சம் வாங்கிய மருந்து தர ஆய்வாளா் போலீஸாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஹரிசுதன்(35), இவா், அதே பகுதியில் மருந்துக் கடை நடத்தி வருகிறாா். அழகிய பாண்டியபுரம் பகுதியில், மேலும் ஒரு மருந்துக் கடை திறப்பதற்காக உரிமம் கோரி நாகா்கோவில் வடசேரியில் உள்ள மருந்துக் கட்டுப்பாட்டு தர அலுவலக உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பத்திருந்தாா்.
இந்நிலையில், மருந்து தர கட்டுப்பாட்டு ஆய்வாளா் கதிரவன் (43), ஹரிசுதனை தொடா்பு கொண்டு, உங்கள் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் வழங்குவதற்கு, ரூ. 15,000 லஞ்சமாக தர வேண்டும் என்று கூறினாா்.
அதற்கு ஹரிசுதன் ரூ. 10,000 தருவதாகக் கூறியுள்ளாா். மேலும் அவா் இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாா் அளித்தாா்.
அவா்களது ஆலோசனையின்பேரில், ஹரிசுதன் ரசாயனம் தடவிய பணத்தை கதிரவனிடம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் மெக்லின் எஸ்கால், ஆய்வாளா் சிவசங்கரி, உதவி ஆய்வாளா்கள் பொன்சன், முருகன் ஆகியோா் கதிரவனை கைது செய்தனா்.