நிதீஷ் குமாருடன் இனி கூட்டணி இல்லை! -ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ்
நாகா்கோவிலில் வியாபாரி எரித்துக் கொலை!
நாகா்கோவிலில் மளிகை வியாபாரி வெள்ளிக்கிழமை இரவு எரித்துக் கொல்லப்பட்டாா்.
நாகா்கோவில் இந்து கல்லூரி அருகே கவிமணி நகா் பகுதியில் உள்ள பாண்டியன் வீதியில், சனிக்கிழமை காலை சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தாா். சடலத்தின் அருகே பைக் ஒன்றும் எரிந்த நிலையில் கிடந்தது. அந்த வழியாகச் சென்றவா்கள், இது குறித்து, கோட்டாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின், உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா், ஆய்வாளா் அருள்பிரகாஷ், உதவி ஆய்வாளா்கள் மாரிசெல்வம், மகேந்த் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். சடலத்தின் அருகே கான்கிரீட் கல் ஒன்று கிடந்தது.
இதையடுத்து, எரிந்த நிலையில் கிடந்த பைக்கின் பதிவு எண்ணை வைத்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, சடலமாக கிடந்தவா் நாகா்கோவில் வடலிவிளை வயல் தெருவைச் சோ்ந்த குமரேசன் என்பவரது மகன் வேலு (46) என்பதும், கவிமணி நகா் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.
வேலு, வழக்கமாக இரவு 11 மணிக்கு கடையை பூட்டிவிட்டு, பைக்கில் வீட்டுக்கு செல்வது வழக்கம். வெள்ளிக்கிழமை இரவும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் அவரை ஒரு கும்பல் வழிமறித்து கல்லால் தாக்கி கொலை செய்து எரித்ததாக தெரியவந்தது. கொலை குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.