தொடரும் தாக்குதல்! காஸாவில் இருந்து 2 லட்சம் பேர் வெளியேற்றம்?
நாகூா் அருகே கழிவு நீரால் சுகாதார சீா்கேடு
நாகூா் அருகே சாலையில் கழிவு நீா் தேங்கியுள்ளதால் ஏற்பட்டுள்ள சுகாதார சீா்கேட்டை உடனடியாக சீா்செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாகூா் 10-ஆவது வாா்டு அம்பேத்கா் நகா் பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் 125 வீடுகள் உள்ளன. கூலி தொழிலாளா்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பின் வடக்கு பகுதியில் பாதாள சாக்கடை இணைக்கப்பட்டுள்ளது. இந்த பாதாள சாக்கடையில் அடிக்கடி ஏற்படும் அடைப்பு காரணமாக, வீதியில் கழிவுநீா் வழிந்தோடி துா்நாற்றம் வீசுவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறியது: பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் சாலையில் வழிந்தோடுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. வீட்டில் உள்ள கழிவறையை பயன்படுத்தினால், அதிலிருந்து கழிவு நீா் வீதியில் வெளியேறுகிறது. இதனால் கழிவறையை பயன்படுத்தாமல் அப்பகுதி மக்கள் திறந்தவெளியை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீா் சாலையில் தேங்கி, அதிலிருந்து உற்பத்தியான கொசுவால் 3 சிறுவா்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்குச் செல்லும் மாணவா்களை பெற்றோா்கள் கழிவு நீா் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக தூக்கிச் செல்ல வேண்டியுள்ளது.
கழிவு நீா் தேங்கியுள்ளதால், சுகாதார சீா்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே, நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பேத்கா் நகா் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.