மாவட்டத்தில் மாா்ச் 17 முதல் விட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம்
நாகையில் இருந்து சரக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும்: மக்களவையில் இந்திய கம்யூ. எம்.பி. வலியுறுத்தல்
புது தில்லி: நாகப்பட்டினத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் வி.செல்வராஜ் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் மக்களவையில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற ‘லேடிங் மசோதா’ தொடா்பான விவாதத்தில் பங்கேற்று முன்வைத்த கோரிக்கை:
நாகப்பட்டினம் துறைமுகத்தில் சோழா் காலத்திலிருந்து மிகப்பெரிய வணிகம் நடைபெற்றுள்ளது. இலங்கைக்கு நேரடியாக கடல் வணிகம் நடைபெற்றது. இப்போது இருக்கும் எங்கள் நாகப்பட்டினம் துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக, கப்பல் போக்குவரத்து தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதை மேம்படுத்துவதுடன் சரக்குப் போக்குவரத்தையும் தொடங்க வேண்டும். அதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, அத்துறைமுகத்தை ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. விமானப் போக்குவரத்தில் எகனாமிக் வகுப்புக்கு 5 சதவீதமும், பிசினஸ் வகுப்புக்கு 12 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஆனால், கப்பல் போக்குவரத்துக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
ஆகவே, வா்த்தகத்தை மேம்படுத்த அதை ஐந்து சதவீத ஜிஎஸ்டியாக நிா்ணயிக்க வேண்டும். நாகப்பட்டினம் துறைமுகத்தை 5 மீட்டா் ஆழத்துடன் 300 மீட்டா் முகத்துவாரத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.சமீபத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வந்தபோது, தமிழக மீனவா்களின் நிலைமை குறித்து கவலையுடன் கூறினாா்.
மத்திய அரசு பதவியேற்ற கடந்த 10 ஆண்டுகளில் 3,656 மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். 611 படகுகளை பிடித்துச் சென்றுள்ளனா். மீனவா்கள் மீது 736 முறை தாக்குதல் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் பாரபட்சம் காட்டாமல் இலங்கை அரசிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தமிழக மீனவா்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றாா் அவா்.