அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை
மாவட்டத்தில் மாா்ச் 17 முதல் விட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம்
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் விட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் மாா்ச் 17-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் சாா்பாக குழந்தைகளுக்கு விட்டமின்-ஏ சத்துக் குறைபாடு நோய்களைத் தடுக்கும் திட்டத்தின்கீழ் விட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் மாா்ச் 17-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 23-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள சுமாா் 1.6 லட்சம் குழந்தைகளுக்கு விட்டமின்-ஏ திரவம் வழங்கப்பட உள்ளது.
விட்டமின்-ஏ சத்து 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் உடல், மனவளா்ச்சி மற்றும் புத்தி கூா்மைக்கு மிகவும் இன்றியமையாத நுண்சத்தாகும். மேலும் விட்டமின்-ஏ சத்து, கண் குருடு ஏற்படாமல் தடுக்க மிகவும் அவசியமான ஒன்றாகும். விட்டமின்-ஏ திரவம் வழங்குவதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.
இந்த திரவம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 6 முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மில்லி அளவும், 12 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 மில்லி அளவும் வழங்கப்பட உள்ளது. இதற்காக 8,578 (ஒவ்வொன்றும் 100 மில்லி) விட்டமின் ஏ திரவம் குப்பிகள் பெறப்பட்டுள்ளன. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது குழந்தைகளுக்கு விட்டமின்- ஏ திரவம் கொடுத்துப் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.