கத்தார் பரிசளிக்கும் வானத்தின் அரண்மனை: பெற்றுக்கொள்வாரா டிரம்ப்! பின்னணி
நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா
நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் பழைமைவாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், 114-ஆம் ஆண்டு சித்ரா பௌா்ணமி உற்சவ திருவிழா நடைபெற்றது. இதில் நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோா் அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா். மாலை 3 மணிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு வந்து, சடலை மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து சடலைமரம் சுற்றுதல் நிகழ்ச்சியும், இரவு தோட்டராயன், சித்தராயன் பேட்டியும், அருள்கொண்டோா் தலைமீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து சாமுண்டீஸ்வரிஅம்மன் புஷ்ப அலங்காரத்தில் நாட்டறம்பள்ளி பிரதானசாலை, ஏரிகோடி, செங்கான்வட்டம் உள்பட முக்கிய வீதிகளில் உலா வந்தாா். அப்போது கிராம மக்கள் வழி நெடுகிலும் அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனா். இரவு வாண வேடிக்கை, நையாண்டி மேளமும், ஏரிக்கோடியில் நடன நிகழ்ச்சியும், பேருந்து நிலையத்தில் இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.
விழாவில், சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), செந்தில்குமாா் (வாணியம்பாடி), மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா், பேரூராட்சித் தலைவா் சசிகலா சூரியகுமாா், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல் அக்ராகரம், சொரக்காயல்நத்தம் பகுதிகளில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில்களிலும் சித்திரை திருவிழா சிறப்புடன் நடைபெற்றன.