`நான் பணக்காரர்; அடுத்தென்ன செய்வதென தெரியவில்லை' - $975 மில்லியன் நிறுவனத்தை விற்ற இந்திய வம்சாவளி!
வினய் ஹிரேமத் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் 975 மில்லியன் அமெரிக்க டாலருக்கு தனது நிறுவனத்தை விற்ற பிறகு ‘வாழ்கையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இவர் லூம் (Loom) என்னும் நிறுவனத்தை உருவாக்கிய இணை நிறுவனர் ஆவார். லூம் என்பது வீடியோ பகிர்வு தளமாகும். லூம் தனது பயனர்களுக்கு குறுகிய கால வீடியோவை உருவாக்கவும், பகிரவும் உதவுகிறது. இந்த நிறுவனத்தை ஜோ தாமஸ், ஷாஹத் கான் ஆகியோருடன் இணைந்து வினய் ஹிரேமத் 2015 ஆண்டில் தொடங்கினார்.
வினய் ஹிரேமத் தனது லூம் என்னும் நிறுவனத்தை அட்லாசியன் (Atlassian) என்னும் நிறுவனத்திற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு 975 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்றார். அதன் பிறகு அவர் வாழ்க்கையில் எந்தவித நோக்கம் இல்லாமல் வாழ்வதாக கூறியுள்ளார். “நான் பணக்காரர். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியவில்லை” என்று தன்னுடைய வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய நிறுவனத்தை விற்ற பிறகு, இனி ஒருபோதும் வேலை செய்ய தேவையில்லை என்ற தொடர்பில்லாத வாழ்க்கை முறைக்கு வந்து விட்டதாக தெரிவித்துள்ளார். பணம் சம்பாதிக்க வேண்டும் மற்றும் ஒரு அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முன்பு இருந்த நோக்கங்கள் அவருக்கு தற்போது இல்லை என தெரிவித்துள்ளார். ``எனக்கு எல்லையற்ற சுதந்திரம் உள்ளது. ஆனால் அவற்றை வைத்து நான் என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று தன்னுடைய வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
1991 ஆம் ஆண்டு பிறந்த வினய் ஹிரேமத், அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது மென்பொருள் சார்ந்த படிப்பை தொடர்கிறார். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மீது கொண்ட ஆர்வத்தினால் தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கலிபோர்னியாவிற்கு செல்கிறார். அங்கு பேக்ப்ளேன் (Backplane) என்னும் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியில் சேர்கிறார். அங்கு அவருக்கு ஷாஹத் கான் என்பவருடன் அறிமுகம் கிடைக்கிறது.
அப்போதே அவர் எண்டர்பிரெட் உள்ளிட்ட சில ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதி அளிக்கிறார். அதன் பிறகு 2015 ஆம் ஆண்டில் ஜோ தாமஸ், ஷாஹத் கான் ஆகியோருடன் இணைந்து லூம் (Loom) என்னும் நிறுவனத்தை தொடங்குகிறார். லூம் தனது பயனர்களுக்கு வீடியோ பகிர்வு சேவையை வழங்குகிறது. குறுகிய கால வீடியோக்களை உருவாக்கவும் அதனை பகிரவும் வழிவகை செய்கிறது. இந்த நிறுவனம் தற்போது 14 மில்லியன் பயனர்களுக்கும் 2 லட்சம் வணிகங்களுக்கும் சேவையை வழங்குகிறது. ஆரம்ப காலத்தில் லூம் நிறுவனம் நிதி பற்றாகுறையுடன் இரண்டு வாரங்கள் செயல்படாமல் இருந்த போது, வினய் ஹிரேமத் தன்னுடைய கிரெடிட் கார்டு மூலம் அதற்கான செலவுகளை சமாளித்து தொடர்ந்து செயல்பட வைத்துள்ளார்.
30 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை லூமை பயன்படுத்த வைத்துள்ளார். லூம் நிறுவனத்தை அட்லாசியன் (Atlassian) என்னும் நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு 975 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது.
தற்போது 33 வயதாகும் வினய் ஹிரேமத், இயற்பியல் மீது கொண்ட ஆர்வத்தினால் ஹவாயில் இயற்பியல் படித்துக் கொண்டிருக்கிறார். மேலும் எலான் மஸ்க் போன்று தொழில் முனைவோராக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மீண்டும் லூம் நிறுவனத்தை போன்று ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்ற தனது ஆர்வத்தை தெரிவித்துள்ளார்.