டேபிள் நிறைய டேட்டாக்கள்...மந்திரிகளால் ஷாக்கான Stalin! | Elangovan Explains
நான் பேசுறது உனக்குப் கிரிஞ்சாகவோ, பூமர் போலவோ இருக்கலாம்! - அப்பாவின் மடல் | #உறவின்கடிதம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அன்பு மகனுக்கு உன் தந்தையின் கடிதம்.
இப்பொழுதெல்லாம் உன்னுடன் பேசும் போது ஓரிரு வார்த்தைகளில் உன்னுடனான எனது உரையாடலை நீ முடித்து விடுகிறாய். உனது நண்பர்களுடன் செலவிடும் நேரத்தில் நான் உனக்கு இடையூறாக இருந்திருக்கலாம் அல்லது இன்ஸ்டாகிராமில் நீ பார்த்து ரசிக்கும் ரீல்ஸ்களுக்கு என்னுடனான உரையாடல் இடையூறாக இருந்திருக்கலாம் அல்லது நாளை நடக்கவிருக்கும் தேர்விற்கான உனது தயாரிப்பின் போது நான் இடையூறாக இருந்திருக்கலாம்.
காரணம் எதுவாயினும் உன் விடுதி வாழ்க்கையின் போது நான் உன்னுடன் ஒரு சில நிமிடங்களாவது ஒவ்வொரு நாளும் பேசிவிடவேண்டும் என்ற எனது ஆவலை என்னால் மாற்றிக் கொள்ள இயலவில்லை.

இது உனக்கு பின்பதின்பருவம். பல்வேறு மனக்குழப்பங்களிலிருந்து நீ விடுபட்டு உன் வாழ்வின் இலட்சியங்களை நோக்கி நகர வேண்டிய காலம். உனக்குப் படிக்கப் பொறுமையிருப்பின் இன்று ஒரு நாள் சில நிமிடங்கள் செலவிட்டு இந்தக் கடிதத்தை முழுவதுமாய் படித்து விடு. நான் எழுதியுள்ள வார்த்தைகள் உன் செயல்களின் ஊடே அவ்வப்போது உனை வழிநடத்தும் என்று நான் நம்புகிறேன்.
எங்கள் காலத்தைப் போலல்ல உங்களது காலம். உலகத்தையே உங்கள் கை விரல்களின் அசைவுகளில், குரல் ஒலியினில் ஏன் உன் எண்ணங்களைக் கூட அறிந்து உன்னைத் திசை திருப்பும் செயற்கை நுண்ணறிவின் துணையுடனான திறன்பேசி உன் வசம் இருக்கிறது.
நீ நினைத்தால் உன் வாழ்வை சீரழிக்கும் அத்தனை வாய்ப்புகளையும் உன் திறன்பேசி வாயிலாக அறிந்திட முடியும். உன் நேரத்தை கபளீகரம் செய்து உன்னைத் தன் வசம் ஒரு அடிமையாக வைத்திருக்கும் வல்லமை மலிவான இணைய இணைப்புடன் இருக்கும் இந்தத் திறன்பேசிக்கு உள்ளது.

உன் நேரத்தின் அருமை தெரியாத இந்த அற்பக் கருவி உன்னைப் பலமணி நேரம் திசைதிருப்பி அழைத்துச் செல்லும் வலிமை கொண்டது. உன் பாடங்களைப் படிப்பதற்காக நீ உன் திறன்பேசியைப் பயன்படுத்த முனையும் போது கூட உன் பாதையை மாற்றிவிடத் தீவிரமாய் அது முனையும். உன் நண்பர்களுடனான இணைய வழி உரையாடலில் ஒரு ஹாய் உன்னைப் பலமணி நேரம் வீணடிக்கச் செய்யும். கூட்டாக விளையாடும் இணைய வழி விளையாட்டுகளின் ஈர்ப்பு மிகப்பெரும் போதை.
இவற்றிலிருந்து விலகி நிற்பதில் நீ உறுதியாக இருக்க வேண்டும். இணையமும் திறன்பேசியும் இவ்வாறு உன்னை ஆக்கிரமிக்கிறதென்றால் மற்ற பொருள்களிலிருந்தும் நீ விலகியிருக்க வேண்டும். புகை, மது, போதைப் பொருள்கள் போன்றவற்றை ஒரே ஒரு முறையேனும் நீ அனுபவித்துப் பார்த்திட வேண்டும் என உனது நண்பர்களில் யாரேனும் ஒருவரோ, சிலரோ உன்னை வலியுறுத்தக்கூடும்.

ஒரு நாள் மட்டும் பயன்படுத்திப்பார்… பிறகு விட்டு விடலாம் என்றெல்லாம் உன்னை வசியப்படுத்தும் வார்த்தைகளை அள்ளி வீசுவர். இந்த வார்த்தைகளுக்கு நட்பின் நிமித்தம் நீ ஒப்புக்கொண்டால் ஒரு வேளை இவை உன்னை ஆயுள் முழுவதும் தம் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் நிலைக்கு அழைத்துச் சென்று விட நேரும்.
ஒரு நொடி தயக்கம், ஒரு நொடி தடுமாற்றம் உன் வாழ்வைச் சீரழித்து விடும். நான் கூறிய இந்த இரண்டு பொருண்மைகளிலும் (ஆக்க நோக்கில் இல்லாத இணையம் மற்றும் திறன்பேசிப் பயன்பாடு, போதைப்பொருள்கள்) நீ மிகக் கவனமுடன் செயல்பட்டு இரண்டாவதை முற்றிலும் தவிர்த்து திறன்பேசி மற்றும் இணையப் பயன்பாட்டை ஆக்க நோக்கில் மட்டுமே பெரும்பான்மை நேரம் பயன்படுத்துவது என்ற கொள்கை முடிவைக் கொண்டிருப்பாயானால் உன் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது.
ஒரு நிலையான வருமானத்தைத் தருவதற்கான தொழில் வாய்ப்பினைத் தேர்ந்தெடுக்க இந்தக் கல்லூரிக் கல்வி உனக்கு பெருமளவு உதவும்.
மற்றுமொரு விடயத்தை உன்னிடம் பேசியே ஆக வேண்டும். உன் பல்கலைக் கழகத்தில்/கல்லூரியில் படிக்கும் எந்த ஒரு பெண்ணையும் போகப்பொருளாய் எண்ணாதே, பார்க்காதே. உன்னுடன் இணையாய் நடந்து வரும் பெண்ணை மதிப்பு மிக்க தோழமையாய்ப் பார். அவர்களின் அகத்தைப் பார். அவர்களின் சிந்தனை ஓட்டத்தை அறிந்து கொள்.
உன்னைப் போல் அவர்களும் பெரும் கனவுடன், சித்தாந்தங்களுடன், கடமையை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கலாம். காமத்தைத் தாண்டி பெண்களிடம் பேச வேண்டியவை ஏராளம் உள்ளன.

எந்த ஒரு பெண்ணும் விரும்பாத பார்வை, சீண்டல், தொல்லை ஆகியவற்றை நீ அவர்களுக்கு இழைக்க மாட்டாய் என்றே நான் நம்புகிறேன். பெண் என்பவள் சக மனுஷி. பிடித்த இலக்கியம், திரைப்படம், அரசியல் சித்தாந்தம், மெய்யியல் கோட்பாடுகள், விளையாட்டு வீரர்கள்/வீராங்கனைகள் என ஏராளமாய் பேசிப்பழகப் பகிர உள்ளன பெண்களிடமும். இவ்வாறான இனிய தோழமைகள் உன் வாழ்வை அழகாக்குவதோடு உன் தன்னம்பிக்கையை வலுப்படுத்துவர். நீ சோர்ந்திருக்கும் தருணங்களில் உனக்கு ஊக்கமளிப்பர்
நடப்பு நிகழ்வுகள் குறித்து நாளும் அறிந்து கொள். அரசியல் விழிப்புணர்வு கொள். அறிவியல் மனப்பான்மையுடன் செய்திகளை அணுகிடு. பெண்களைத் தோழமையாய் நடத்திடு. மனிதநேயத்துடன் உன்னைக் கடந்து செல்லும் அல்லது கூட வரும் மனிதர்களைப் பார்த்திடு.
கல்வியை இரசித்துக் கற்றிடு. ஐயங்கள் இருப்பின் அவற்றை அகற்றிக் கொள்ள தேடலோடு இரு. தெளிவாய் கற்றுக்கொள். ஆக்கபூர்வமாக இணையத்தையும் திறன்பேசியையும் பயன்படுத்திடு. நான் நேரடியாய் எல்லாவற்றையும் பேசிவிட்டேன்.
நான் பேசிய விதம் உனக்குப் பிடிக்காமல் கிரிஞ்சாகவோ, பூமர் போலவோ இருந்திருக்கலாம். ஆனாலும், இந்தக் கடிதத்தில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உன் எதிர்கால வாழ்வை மனதிற்கொண்டு என்னுள் எழுந்த எண்ணத்தின் வெளிப்பாடுகள்.

இது உனக்கு மட்டுமானதல்ல. உனது நண்பர்களுக்குமானது. இதை யாருக்கெல்லாம் வாசிக்கக் கொடுக்கலாம் என்று உனக்குத் தோன்றுகிறதோ அவர்களுக்கெல்லாம் வாசிக்கக் கொடுக்கலாம்.
உன் வாழ்வு சிறக்க என்னாளும் உன்னுடன் இந்த வார்த்தைகளின் வழி துணை நிற்பேன். இவ்வளவு நேரம் செலவழித்து இந்தக் கடிதத்தைப் படித்தமைக்காக மகிழ்ச்சியடைகிறேன்.
உன்னை நேரில் சந்திக்கும் அடுத்த தொடர் விடுமுறைக்காகக் காத்திருக்கிறேன்.
இப்படிக்கு உன் அன்பு அப்பா!
