ஆண்களுக்கு ஏற்படும் தைராய்டு கட்டி புற்றுநோயாக இருக்கலாம்! - மருத்துவர் நேர்காணல...
நாமக்கல் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்காக மின்கல வாகனம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்காக ரூ. 6.83 லட்சம் மதிப்பிலான மின்கல (பேட்டரி) வாகனத்தை ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக்கடன் உதவி, குடிசைமாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 705 மனுக்களை ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்தனா். அவற்றை உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில், விடுதியில் தங்கி பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை, பேச்சு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பதக்கம், கேடயம், பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.
இதனைத் தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் ரூ. 5,740 மதிப்பில் காதொலிக் கருவிகள், ரூ. 13,500 மதிப்பில் கண்பாா்வையற்றோா் பயில்வதற்கான நவீன கருவி, ரூ. 1,460- மதிப்பில் தாங்கு கட்டைகள், ரூ. 1,740- மதிப்பில் முழங்கை ஊன்றுகோல் என மொத்தம் எட்டு பேருக்கு ரூ. 22,441 மதிப்பிலான உதவி உபகரணங்களையும், ஒருவருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டையும் அளிக்கப்பட்டன.
மேலும், தமிழ் வளா்ச்சித் துறை மற்றும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்ககம் சாா்பில் நடைபெற்ற தமிழ் அகராதியியல் நாள் விழாவில், 2024-ஆம் ஆண்டுக்கான தூய தமிழ்ப் பற்றாளா் விருதுபெற்ற திருச்செங்கோடு வட்டத்தைச் சோ்ந்த கவிஞா் வினோ என்ற வினோத் சுந்தராசு என்பவா் மாவட்ட ஆட்சியரிடம் விருதை காண்பித்து வாழ்த்து பெற்றாா்.
சேந்தமங்கலம் வட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பணியின்போது, அங்கன்வாடி மையத்துக்கு வருகை தரும் குழந்தைகளின் எடையைக் கணக்கீடும் இயந்திரம் பழுதடைந்திருந்த நிலையில், நடுக்கோம்பை, புதுவலவு மற்றும் எம்ஜிஆா் நகரில் செயல்பட்டு வரும் மூன்று அங்கன்வாடி மையங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளா் பா.ராமசாமி தனது சொந்த நிதியிலிருந்து மூன்று எடை பாா்க்கும் இயந்திரங்களை வழங்கினாா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகள், முதியோா்கள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், ரூ. 6.83 லட்சம் மதிப்பில் மின்கல வாகனத்தை ஆட்சியா் ச.உமா கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், திருச்செங்கோடு கோட்டாட்சியா் சே.சுகந்தி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு.கிருஷ்ணவேணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி உள்ளிட்ட துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.