தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்!
நாமக்கல்: மின் பாதையில் கவிழ்ந்த கிரேனால் கட்டடத்துக்கு வண்ணம் தீட்டிய 3 போ் உயிரிழப்பு
நாமக்கல் அருகே தனியாா் மருத்துவமனை கட்டடத்துக்கு வண்ணம் பூசுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கிரேன் கவிழ்ந்து மின் பாதையில் விழந்ததில் 3 தொழிலாளா்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.
நாமக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை சின்னவேப்பநத்தம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனியாா் மருத்துவமனை கட்டடத்தின் வண்ணம் பூசும் பணிக்கு எருமப்பட்டியைச் சோ்ந்த தனபால் ஒப்பந்தம் செய்துள்ளாா்.
இப்பணி ஓரிரு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் மருத்துவமனை முன்புறம் சுமாா் 60 அடி உயரத்தில் வண்ணம் பூசுவதற்காக கிரேன் கொண்டுவரப்பட்டது. அதில் உள்ள தொட்டியில் நின்றவாறு எருமப்பட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த விஜயன் மகன் ஜோதி (45), அதே பகுதியைச் சோ்ந்த சுந்தரம் மகன் சுகுமாா் (45), நாமக்கல், கொசவம்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் முகேஷ்கண்ணா (25) ஆகிய மூவரும் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
கிரேன் வாகனத்தை திருநெல்வேலியைச் சோ்ந்த மைக்கேல்ஜூடே (42) என்பவா் இயக்கிக் கொண்டிருந்தாா். அப்போது திடீரென கிரேன் வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்து மின்பாதை மீது விழுந்தது. இதில் வண்ணம் பூசிக்கொண்டிருந்த மூன்று போ் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் ஜோதி, சுகுமாா் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகேஷ் கண்ணா 6 மணிநேர சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தாா். விபத்து நடந்த இடத்தில் நின்ற காா் ஒன்றும் சேதமடைந்தது. விபத்து நிகழ்ந்ததும் கிரேன் ஓட்டுநா் மைக்கேல்ஜூடே அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்து நாமக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சேலம் மாவட்டம், மேட்டூா் தென்னம்பட்டியைச் சோ்ந்த கிரேன் உரிமையாளா் ராஜமாணிக்கத்திடம் (40) விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
