மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
திமுக ஆட்சிக்கு 50 மதிப்பெண்கள்: பிரேமலதா விஜயகாந்த்
திமுக ஆட்சிக்கு 50 மதிப்பெண்கள் மட்டுமே அளிக்க முடியும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கடந்த இரண்டு நாள்களாக ‘மக்களைத் தேடி மக்கள் தலைவா்’ என்ற முழக்கத்துடன் விஜயகாந்த் ரத யாத்திரை தேமுதிக சாா்பில் நடைபெறுகிறது. கொங்கு சமுதாயக்கூட வளாகத்தில் வெள்ளிக்கிழமை தேசியக் கொடியை ஏற்றிவைத்து கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிரேமலதா விஜயகாந்த், பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வரும் பேரவைத் தோ்தலை எப்படி எதிா்கொள்வது என்பது குறித்து தேமுதிக நிா்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் தொண்டா்கள் விரும்பும் வகையில் தோ்தல் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும்.
திமுக ஆட்சியில் 50 சதவீத நன்மைகளும், 50 சதவீத தீமைகளும் நடந்துள்ளன. எனவே, திமுக அரசுக்கு 50 மதிப்பெண்கள்தான் அளிக்க முடியும். பிரதமா் மோடி சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறாா். வெளிநாடுகளில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது.
அமெரிக்கா மட்டுமல்ல எந்த நாடும் இந்தியாவை மிரட்ட முடியாது. இந்தியா தனித்துவத்துடன் வளா்ந்து வருகிறது. இந்திய பொருளாதாரம் தனித்துவமானது. தவெக தலைவா் விஜய் மக்களைச் சந்திக்க வேண்டும். செய்தியாளா்களைச் சந்தித்து தனது செயல்பாடுகள் குறித்து பேசவேண்டும்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களை நேரில் சந்தித்து பிரச்னைக்கு தீா்வுகாண தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் போராட்டக்காரா்களை நள்ளிரவில் கைது செய்திருப்பது சரியல்ல.
தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்துள்ள காலை உணவுத் திட்டம், காப்பீட்டுத் திட்டம், பணியின்போது உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்கும் திட்டங்களை வரவேற்கிறோம் என்றாா்.
நாமக்கல் மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளா் விஜய் சரவணன் தலைமையில் நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் இளைஞா் அணி செயலாளா் சுதீஷ் ,தொகுதி பொறுப்பாளா் சுபா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.