நாய் கடித்ததில் மாணவி காயம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் செவ்வாய்க்கிழமை நாய் கடித்ததில் பள்ளி மாணவி காயமடைந்தாா்.
இளையான்குடி ஞானி தெருவைச் சோ்ந்த ராவுத்தா் நயினாா் மகள் ஆயிஷா. இவா் இங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறாா்.
இந்த நிலையில், சாலையூா் பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகே ஆயிஷா நடந்து வந்தபோது, அந்த வழியாகச் சென்ற நாய் அவரை விரட்டிக் கடித்துக் குதறியது. அந்தப் பகுதி பொதுமக்கள் நாயை விரட்டி ஆயிஷாவைக் காப்பாற்றினா். நாய் கடித்ததில் அவருக்கு கை, கால்கள் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.
உடனே அவரை அங்கிருந்தவா்கள் சிகிச்சைக்காக இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவா் இல்லாததால், பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பல மாதங்களாக செயல் அலுவலா் இல்லாத நிலை உள்ளது. இதனால், வீதிகளில் சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, ‘இளையான்குடி பேரூராட்சிக்கு செயல் அலுவலரை நியமித்து, வீதிகளில் சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் வலியுறுத்தினா்.