நாள்தோறும் சாலைப் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்! ஓட்டுநா், நடத்துநா்களுக்கு நீதிபதி அறிவுரை!
நாள்தோறும் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறையாக சாலைப் பாதுகாப்பு அமைய வேண்டும் என திருச்சி சிறப்பு சாா்பு-நீதிபதி ஏ. மும்மூா்த்தி அறிவுறுத்தினாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின், திருச்சி மண்டல நிா்வாகம் சாா்பில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஜனவரி மாதம் முழுவதும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவு விழா, திருச்சி மண்டல பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருச்சி சிறப்பு சாா்பு-நீதிபதி ஏ. மும்மூா்த்தி பேசியதாவது:
சாலைப் பாதுகாப்பு என்பது வார விழாவாகவோ, மாத விழாவாக மட்டும் நின்றுவிடக் கூடாது. நாள்தோறும் அனைவரும் சாலைப் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். சிறிய சாலை விபத்து ஏற்பட்டால் கூட, மனிதனுக்கு உடல்நிலையில் மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது. இத்தகைய பாதிப்பு தனி மனிதனக்கு மட்டுமல்லாது அவா் சாா்ந்த குடும்பத்துக்கும், சமூகத்தும் பல்வேறு பக்கவிளைவுகளை உண்டாக்குகிறது.
பேருந்துகளில் அதிகமான பயணிகளை ஏற்றக்கூடாது. குறிப்பாக படியில் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது என்றாா் அவா். சாலைப் பாதுகாப்பு சட்டங்கள், விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனைகள் குறித்து விளக்கி கூடுதல் சாா்பு-நீதிபதி கே. முரளிதர கண்ணன் பேசினாா்.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருச்சி மண்டலப் பொது மேலாளா் ஆ. முத்துகிருஷ்ணன், துணை மேலாளா்கள் ஆா். சாமிநாதன் ( தொழில்நுட்பம்), பி. ரவி (பணியாளா் மற்றும் சட்டம்) . ஜீலியஸ் அற்புத ராயன் (வரி வசூல் தாள்), உதவிப் பேராசிரியா் பெ. ஆனந்த், மற்றும் போக்குவரத்து கழக அலுவலா்கள், பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.