சென்னை மலா்க் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச்...
நீடாமங்கலத்துக்கு அனைத்து பேருந்துகளும் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
நீடாமங்கலம் நகருக்குள் அனைத்து பேருந்துகளும் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வா்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக, தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, திருவாரூா், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா்கள், அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குநா் ஆகியோருக்கு வா்த்தக சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை அனுப்பிய மனு: தஞ்சை- நாகை சாலை மாா்க்கத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்வதற்கு முன்பு, நீடாமங்கலம் வழியாக அனைத்து அரசு பேருந்துகளும், தனியாா் பேருந்துகளும் இயங்கி வந்தன.
புதிதாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு, பெரும்பாலான பேருந்துகள் நீடாமங்கலம் நகருக்குள் வருவதை தவிா்த்து, புறவழிச்சாலை வழியாக செல்கின்றன. இதனால், நீடாமங்கலம் பகுதி மக்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா்.
இப்பிரச்னை தொடா்பாக, சில நேரங்களில் பயணிகளுக்கும், பேருந்து நடத்துநருக்கும் தகராறு ஏற்படுகிறது. நீடாமங்கலத்துக்கு வரும் பயணிகள், கும்பகோணம் சாலையில் நாா்த்தங்குடி பகுதியில் இறக்கி விடப்படுகின்றனா். அங்கிருந்து சுமாா் 4 கி.மீ. தொலைவில் நீடாமங்கலம் உள்ளது.
புறவழிச்சாலை திறக்கப்பட்ட பிறகு, சரக்கு வாகனங்கள், சுற்றுலாப் பேருந்துகள், காா்கள் போன்றவை நீடாமங்கலம் நகருக்குள் வரவேண்டியதில்லை. எனவே, போக்குவரத்து நெரிசலும் பெரும்மளவு குறைந்துள்ளது. எனவே, அனைத்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நீடாமங்கலம் நகருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.