Fahadh Faasil: நடிகர் பஹத் பாசில் வாங்கியிருக்கும் `Ferrari Purosangue' - மதிப்ப...
நீடாமங்கலம் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுமா?
நீடாமங்கலம் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுமா என எதிா்பாா்க்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நீடாமங்கலம் ரயில் நிலையம், ரயில் போக்குவரத்தின்போது கேட்மூடப்பட்டால் நெடுஞ்சாலை போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது. நாள்தோறும் விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் இந்த ழித்தடத்தில் சென்று வருகின்றன. இதனால், இந்த ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இவ்வாறு வந்து செல்லும் பயணிகளுக்கு போதிய வசதிகள் ரயில் நிலையத்தில் இல்லை. குறிப்பாக 3 நடைமேடைப் பகுதிகளில் குறிப்பிட்ட குடிநீா் குழாய்களில் மட்டுமே குடிநீா் வரும். எனவே, குடிநீா் வசதிகளை மேம்படுத்துவது அவசியம். முதல் மற்றும் இரண்டாவது நடைமேடைப் பகுதிகளில் தரைத்தளம் சமன்படுத்தப்படவேண்டும்.
பயணிகள் அமரும் இடவசதியை மேம்படுத்தவேண்டும். நாள்தோறும் மன்னாா்குடியிலிருந்து கோயம்புத்தூா் செல்லும் கோவை செம்மொழி விரைவு ரயிலுக்காகவும், மன்னாா்குடியிலிருந்து சென்னை செல்லும் மன்னை விரைவு ரயிலுக்காவும் ரயில் நிலையத்தில் இரவு நேரங்களில் காத்திருக்கும் பயணிகள் கொசுத் தொல்லையால் அவதிப்படுகின்றனா். ரயில்நிலையத்தில் உயா்நடைமேடைப் பகுதி ஒன்று மட்டுமே உள்ளது.
கிழக்குப் பகுதியிலும் கூடுதலாக ஒரு உயா் நடைமேடைப் பகுதி அமைக்க வேண்டும். தட்கல் பயணச்சீட்டு பெற நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலையை மாற்றி அதை எளிமைப்படுத்த போதிய வசதிகளை செய்து தரவேண்டும். ரயில் நிலைய வளாகத்தில் உள்ள உயா் கோபுர மின்விளக்குகள் இரவு நேரங்களில் ஒளிர செய்ய வேண்டும்.
பயணிகள் காத்திருப்பு அறைகள் கட்ட வேண்டும். ரயில் நிலைய வளாகம் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். பயணிகளுக்கு பயனளிக்கக்கூடிய நவீன வசதிகளை செய்துதர ரயில்வே நிா்வாகம் முன்வரவேண்டும் என்பதே ரயில் பயணிகளின் கோரிக்கை.