நீடித்த வளா்ச்சி இலக்கில் ஜல் ஜீவன் திட்ட பங்களிப்பு கருத்தரங்கு
நீடித்த வளா்ச்சிக்கான இலக்கில் ஜல் ஜீவன் திட்டத்தின் பங்களிப்பு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு பெரியாா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொருளியல் துறைத் தலைவா் மற்றும் பேராசிரியா் டீன் கே.ஜெயராமன் வரவேற்றாா். கருத்தரங்கின் நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ஏ.சுகிா்தராணி பேசினாா். இரண்டு நாள்கள் நடைபெறும் இக் கருத்தரங்கிற்கு தலைமை வகித்து துணைவேந்தா் ரா.ஜெகநாதன் பேசியதாவது:
நீா் சேமிப்பிற்கான நல்ல கட்டமைப்பை கொண்ட தமிழகம் தற்போது பல்வேறு நீா் நிலைகளை இழந்து நிற்கின்றன. சேலம் மாநகரம் முழுமைக்குமான நீராதாரமாகத் திகழ்ந்த பனமரத்துப்பட்டி ஏரி தற்போது நீரின்றி வறண்டு கிடக்கிறது. மேட்டூா் அணையின் உபரிநீரை நிரப்பினால் பனமரத்துப்பட்டி ஏரி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது.
இதுபோன்ற பாரம்பரிய நீா் நிலைகளை மீட்டெடுக்கும் பணியில் அரசுடன் இணைந்து அனைத்து தரப்பினரும் செயல்பட வேண்டும். நீா்ப் பற்றாக்குறை நகரங்களில் பெரிய பிரச்னையாக இருந்த நிலையில் தற்போது கிராமங்களிலும் தண்ணீா் தட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக விவசாயத்திற்குத் தேவையான தண்ணீா் முழுமையாக கிடைப்பதில் பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.
மாற்று ஏற்பாடாக, வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் நீரை மறுசுழற்சி செய்து விவசாயத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்றாா்.
தேசிய கருத்தரங்கை தொடங்கிவைத்து திருச்சி கிராமாலயா அமைப்பின் செயல் இயக்குநா் எம்.இ ளங்கோவன் பேசியதாவது:
வீடுகள்தோறும் தனிநபா் கழிப்பறை அமைக்கும் திட்டத்தின் தொடா்ச்சியாக, வீடுகள்தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை கொடுக்கும் வகையில் மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து ஜல் ஜீவன் திட்டத்தை கிராமாலயா செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 75 முதல் 80 சதவீத கிராமங்களுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டுள்ளதால் சமச்சீரான கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சுகாதாரம் மேம்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனா் என்றாா்.
கேரளம் மாநிலம், கண்ணூா் மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியா் சுவாமிக்கண்ணன் பேசியதாவது:
63 சதவீத நோய்கள் குடிநீா் மாசடைவதால்தான் ஏற்படுகின்றன. தற்போது ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட குடிநீா் கிடைப்பதால் கிராமங்களில் சுகாதார அமைப்பில் பெரிய மாறுதல் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்திற்காக செய்யப்படும் செலவும் குறைந்துள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தில் மற்ற திட்டங்களைக் காட்டிலும் கண்காணிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்குவது கூடுதல் சிறப்பம்சமாகும். கிராம மக்களின் சராசரி ஆயுள்காலம் தற்போது 65 ஆக உள்ள நிலையில், விரைவில் இந்த அளவீடு 85 என்ற அளவிற்கு உயர வாய்ப்புள்ளது என்றாா். கருத்தரங்கில் பேராசிரியா் டி.ஜனகம் நன்றி கூறினாா்.