ரூ.5 லட்சத்துடன் தில்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இருவர் கைது!
நீட்-பிஜி 2024 கலந்தாய்வு: மத்திய அரசு, ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
2024-ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான (நீட்-பிஜி) மூன்றாம் கட்ட கலந்தாய்வை புதிதாக நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
2024 நீட்-பிஜி கலந்தாய்வுக்கு தகுதிபெற்ற மருத்துவ மாணவா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் கூறியிருப்பதாவது:
2024-ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவ இடங்களுக்கான சோ்க்கையில் மாநில ஒதுக்கீட்டிலான இடங்களுக்கு குறிப்பிட்ட சில மாநிலங்களில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவு பெறுவதற்கு முன்னரே, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அதன் காரணமாக, அதிக மதிப்பெண் பெற்ற பல மாணவா்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வில் இடம்பெற்றதோடு, அடுத்த நடைபெற்ற மாநில அளவிலான இரண்டாம் கட்ட கலந்தாய்விலும் பங்கேற்று சிறந்த மருத்துவ இடங்களைப் பெறும் வாய்ப்பைப் பெற்றனா்.
அவ்வாறு, இவா்கள் இரண்டு இடங்களையும் குறிப்பிட்ட நாள்களுக்குத் தடுத்து வைத்ததால், மனுதாரா் போன்ற தகுதிவாய்ந்த பல மாணவா்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. மாநில அளவிலான இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த பின்னரே, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.
மத்திய பிரதேசம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வருவதற்கு முன்னரே, மாநில இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தி முடித்துவிட்டன. இது அரசமைப்புச் சட்டப் பிரிவு 14 மற்றும் 21 வழங்கும் அடிப்படை உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையாகும்.
எனவே, முதுநிலை மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக நடத்த தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வினோத்சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அதன் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை வரும் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.