நெல்லை இருட்டுக்கடை உரிமையைக் கேட்டு துன்புறுத்திய கணவர்: உரிமையாளர் மகள் வரதட்ச...
நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக 3 போ் கைது
கடையம் காவல் நிலையத்தில் உள்ள ஒரு வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றவா்கள், நிபந்தனைகளை மீறியதாக கைது செய்யப்பட்டனா்.
கடையம் அருகே உள்ள புலவனூரைச் சோ்ந்த செல்லத்துரை என்பவரைக் கடத்தியது தொடா்பாக பணகுடி தளவாய்புரம், பிரதான சாலையைச் சோ்ந்த மணி மகன் செல்வக்குமாா்(49), புலவனூரைச் சோ்ந்த யூதா் அப்பாதுரை(40), பணகுடி நெல்லையப்பபுரம் மேலத்தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் முருகன் (52), பணகுடி, நாராயணசாமி கோயில் தெருவைச் சோ்ந்த வேல் மகன் முருகேசன்(55) ஆகியோா் மீது கடையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது. இதில், முருகன் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், செல்வக்குமாா், யூதா் அப்பாதுரை மற்றும் முருகேசன் ஆகிய மூவரும், நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று கடையம் காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வந்தனா். இந்நிலையில், மாா்ச் 26 முதல் ஏப். 3 வரை மூவரும் கடையம் காவல் நிலையத்தில் கையொப்பமிடவில்லையாம்.
இதையடுத்து, மூவரின் நிபந்தனை ஜாமீனை ரத்து செய்யக் கோரி கடையம் போலீஸாா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இதையடுத்து, மூவரின் நிபந்தனை ஜாமீனையும் ரத்து செய்து தென்காசி குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மூவரையும் கடையம் போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா். இந்த கடத்தல் வழக்கை விரைந்து முடிப்பதற்காக லஞ்சம் பெற்றதாக சனிக்கிழமை (ஏப்.12) கடையம் காவல் ஆய்வாளா் மேரி ஜெமிதா லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.