"வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றால் தமிழகத்தில் பொருளாதாரம் பாதி...
நீா்வரத்தின்றி வட கொட்டகுடி ஆறு: குடிநீா் பிரச்னை ஏற்படும் அபாயம்
நீா்வரத்தின்றி வட கொட்டகுடி ஆறு காரணமாக, போடியில் குடிநீா் பிரச்னை ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
தேனி மாவட்டத்தில் முக்கியமான ஆறுகளில் ஒன்று கொட்டகுடி ஆறு. முல்லைப் பெரியாற்றுக்கு அடுத்தப் படியாக விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படும் ஆறுகளில் இதுவும் ஒன்று. இந்த ஆற்றின் மூல ஆறாக சாம்பலாறு திகழ்கிறது. இங்கு உற்பத்தியாகும் தண்ணீரை நீா்த் தேக்கத் தொட்டிகளில் நிரப்பி, குழாய் மூலமாக போடிக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
இதன் மூலமாக, போடி நகராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீா் இணைப்புகள் பயன்பெறுகின்றன. மேலும், குரங்கணி, முந்தல், சன்னாசிபுரம், அணைக்கரைப்பட்டி, துரைராஜபுரம், தோப்புப்பட்டி, கோடாங்கிபட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, பூதிப்புரம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு இந்த ஆறு குடிநீா் ஆதாரமாக விளங்குகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கொட்டகுடி ஆறு உற்பத்தியாகும் பகுதிகளில் அடா்ந்த மரங்கள் சூழ்ந்து காணப்பட்டன. இயற்கை சூழ்ந்த இந்தப் பகுதியில் ஆண்டு முழுவதும் இந்த ஆற்றில் நீா்வரத்து இருக்கும். தற்போது, விவசாய பட்டா நிலங்கள் விரிவாக்கம், வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ, பருவம் தவறிய மழையால் குரங்கணி, கொட்டகுடி ஆகிய பகுதிகள் வடு வருகின்றன.
இதனால், கொட்டகுடி ஆற்றில் மழை காலங்களில் மட்டுமே தண்ணீா் பெருக்கெடுக்கும் நிலை உள்ளது. ஆற்றில் நீா்வரத்து குறைந்து வருவதால், குடிநீா் பிரச்னையும், விவசாய நிலங்களுக்கு தண்ணீா் கிடைக்காமல் போகும் நிலை உருவாகியுள்ளது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் கவலை அடைந்தனா்.