`நீ இங்கு சுகமே, நான் அங்கு சுகமா?' - Long distance relationship சிக்கல்கள், தீர்வுகள்!
'தொலைவில் இருந்தும் அருகில் இருப்போம்' என்பதெல்லாம் சினிமாவில் பாடலாகக் கேட்பதற்கு இனிமையாக இருக்கலாம். ஆனால், நிஜத்தில் அப்படியில்லை. காதலைக்கூட தொலைவில் இருந்தபடி வாட்ஸ்அப்பில் வளர்த்துவிடலாம். ஆனால், திருமணம் முடிந்த தம்பதியர், மனதையும் உடலையும் ஒருசேர பகிர வேண்டியவர்கள்; அதன் மூலம் காதலை வளர்க்க வேண்டியவர்கள். வெளிநாடு, வெளியூர் என அவர்கள் பிரிந்திருக்கும்போது, அந்தச் சூழ்நிலைக்கே உரிய சில பிரச்னைகளை நிச்சயம் சந்திக்க நேரிடும். அந்தப் பிரச்னைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் பார்க்கலாமா?

கணவனும் மனைவியும் சேர்ந்து இருக்கையில், அவர்கள் போடுகிற சண்டைகள்கூட ஸ்வீட், நத்திங் வகையறாதான். திருமணம் முடிந்த ஒன்றிரண்டு வருடங்களில் 'தரையெல்லாம் தலைமுடி கிடக்குன்னு இவனுக்கு நம்மளைத் திட்டலைன்னா தூக்கம் வராது' என்று மனைவிக்குப் புரிந்துவிடும். கணவனுக்கு, 'இவ வாய் அளவுலதான் நம்மளை குறை சொல்றா. மனசுக்குள்ளே பயங்கர காதல்காரி' என்று தெரிந்துவிடும்.
இதுவே, கணவன், மனைவி வெளிநாடு, வெளியூர் என வேலை, சூழல் காரணங்களால் பிரிந்து இருக்கும்போது, போனில் பேசுகிற நேரங்களில் எல்லாம் வீட்டுத் தேவைகளையும் பிரச்னைகளையும் மட்டுமே பகிர்ந்துகொண்டால், மேலே சொன்ன அந்த அழகான வாழ்வியல் புரிந்துணர்வுகள் அவர்களுக்குள் நிகழாமலேயே போய்விடலாம். இதற்கு, தம்பதிகள் தங்களுக்கென வாரத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை நேரம் ஒதுக்கி வாட்ஸ்அப் காலோ, வீடியோ காலோ அரைமணி நேரம் பர்சனலாகப் பேசலாம். இது உங்கள் மனநெருக்கத்தை அதிகப்படுத்தும்.

தொலைதூர தாம்பத்யத்தின் முதல் வில்லன், பரஸ்பரம் நம்பிக்கையின்மைதான். 'நம்ம பக்கத்துல இல்லாததால நமக்கு துரோகம் பண்ணிடுவாளோ/னோ' என்று இருவருமே மனதைப்போட்டு வருத்திக்கொள்ள எக்கச்சக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கு உங்கள் துணையை நம்புவதைத் தவிர வேறு வழியேயில்லை.
கூடவே, உடல்கள் தள்ளியிருப்பதை சமன் செய்யும் அளவுக்கு மன நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் இருவரும் நிறைய பேச வேண்டும். தினசரி நிகழ்ச்சிகளைக்கூட, அது உப்புச்சப்பில்லாத விஷயமே என்றாலும், பகிர்ந்துகொள்ள வேண்டும். 'என் துணை எனக்குத் தெரியாமல் எதையும் செய்யமாட்டார்' என்ற நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டீர்கள் என்றால், சந்தேகத்தை இடது கையில் ஹேண்டில் செய்துவிடலாம்.

'காலையில் சண்டை மாலையில் சரியா போச்சு' பழமொழியெல்லாம் நார்மல் கணவன் மனைவிக்கு ஓகே. ஆனால், தொலைதூர தம்பதியருக்கு இந்த வாய்ப்பு இல்லையே. அதனால், இரவு உறங்கச் செல்வதற்கு முன், உங்கள் சொந்தக் காதல் கதையில் ஒன்றிரண்டு சம்பவங்களை வாய்ஸ் நோட்டில் பரிமாறிக்கொள்ளலாம். இன்னொரு ஐடியா, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் உங்கள் துணையின் புகைப்படங்கள், பின்னணியில் அவருக்குப் பிடித்த பாடல் என்று தினமும் வைக்கலாம்.
எல்லா இடங்களிலும், ஒற்றுமையாக இருக்கிற இருவரைப் பிரித்துப் பார்க்க நினைக்கிற நல்ல மனதுக்காரர்கள்(!) சிலர் இருப்பார்கள். இதற்கு நம் வீடுகளும் விதிவிலக்கில்லை. அதிலும் தொலைதூர உறவில், இது ஜஸ்ட் லைக் தட் நடக்கும். 'என் துணையைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அது என் காதுகளில் விழாது' என்கிற மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது மட்டுமே, உங்கள் தாம்பத்யத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கான ஒரே வழி.

நிகழ்காலத்தில் அருகே துணை இல்லாதிருப்பது கடினமான விஷயம்தான். இதை, துணை தொடர்பான வேறு சில விஷயங்களைக் கொண்டுதான் ஈடுசெய்ய வேண்டும். அழகான காதல் வார்த்தைகள் கொண்ட கிரீட்டிங் கார்டுகளை பரஸ்பரம் அனுப்பிக்கொள்ளலாம். அவற்றைப் பார்க்கிற நேரங்களில் எல்லாம் ஒரு சின்ன சிரிப்புடன் உங்கள் துணையின் நினைவும் வரும்தானே?
லைஃப் பார்ட்னர் வெளிநாட்டுக்குப் போய்/வெளியூரில் தங்கி சம்பாதிக்க வேண்டும் என்பதை இருவரும் சேர்ந்தே முடிவு செய்திருந்தாலும்கூட, 'இப்படிப் பிரிஞ்சு வாழுற கொடுமைக்கு எப்பதான் முடிவு வருமோ' என்று கோபமும் வரத்தான் செய்யும். குறிப்பாக, முக்கியமான வீட்டு விசேஷங்களின்போது கணவருக்கு விடுமுறைக் கிடைக்காதபோது இப்படிப்பட்ட எரிச்சல் வரும். உங்களுடைய பொறுமை மட்டுமே இதற்குத் தீர்வாக அமையும்.