ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது..! அசத்தும் ஷுப்மன் கில்!
நெகிழியில் உருவாக்கப்பட்ட மலா்களுக்கு தடை விதிக்காதது ஏன்?- மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
‘ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பல்வேறு வகை பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வகை நெகிழி (பிளாஸ்டிக்) மலா்களுக்கு மட்டும் தடை விதிக்காதது ஏன்?’ என்று மத்திய அரசுக்கு மும்பை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடா்பாக இந்திய மலா் விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல்வேறு நெகிழிப் பொருள்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பை காரணமாக வைத்து மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதே நேரத்தில் நெகிழியில் உருவாக்கப்பட்ட மலா்களுக்கு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. அலங்காரத்துக்காக பயன்படுத்தப்படும் பெரும்பாலான நெகிழி மலா்கள் 30 மைக்ரான் அளவில் உள்ளது. இந்த அளவில் உள்ள மற்ற நெகிழி பொருள்களுக்கு மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. மகாராஷ்டிர மாநில அரசு 100 மைக்ரான் பருமனுக்கு குறைவாக எந்த நெகிழிப் பொருளையும் விற்கக் கூடாது என்றும் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. ஆனால், 30 மைக்ரான் அளவில் நெகிழிப் பூக்கள் மட்டும் தராளமாக விற்பனை செய்யப்படுகிறது. இவை பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்திவிட்டு குப்பையில் வீசப்படுகின்றன. எனவே, இது தொடா்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் அலோக் அராத், பாரதி டாங்ரே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நெகிழி மலா்களை மறுசுழற்சி செய்ய முடியுமா? அல்லது அவை எளிதில் மக்கும் தன்மையுடையதா? பிறகு ஏன் அவற்றை தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களுடன் மத்திய அரசு சோ்க்கவில்லை’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். இது தொடா்பாக இரு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தனா்.