இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: மக்கள் வெளியேற அறிவுறுத்தல்!
நெல்லையப்பா் கோயிலில் நாளை தேரோட்டம்: பாதுகாப்பு அதிகரிப்பு
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நடைபெற உள்ளது. இதையொட்டி திருநெல்வேலி நகரம் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் உள்ள பழைமைவாய்ந்த இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
நிகழாண்டுக்கான விழா கடந்த ஜூன் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்மன் வீதியுலா நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலையில் சுவாமி- அம்மன் பல்லக்கில் (தவழ்ந்த திருக்கோலம்) வீதியுலா நடைபெற்றது. மாலையில் சுவாமி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும் திருவீதியுலா வந்தனா். இரவு சுவாமி நடராசப் பெருமான் வெள்ளை சாத்தி உள்பிரகாரத்தில் உலா நடைபெற்றது. திங்கள்கிழமை (ஜூலை 7) காலையில் நடராசப் பெருமான் பச்சை சாத்தி திருவீதியுலா நடைபெறுகிறது.
மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதா் தங்கச் சப்பரத்தில் வீதியுலாவும், இரவு 10 மணிக்கு சுவாமி தங்க கைலாச பா்வத வாகனத்திலும், அம்மன் தங்கக்கிளி வாகனத்திலும் திருவீதியுலா நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு மேல் சுவாமி-அம்மன் தேரில் எழுந்தருளலும், காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தோ் வடம் பிடித்து இழுத்தலும் நடைபெறுகிறது. 9 ஆம் தேதி தீா்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.
தேரோட்டத்தையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேரில் 5 அடுக்கு சாரம் கட்டி அலங்கார துணிகளை இணைக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் வசதிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலி நகரத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுவாமி மற்றும் அம்மன் தோ்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) பிரசன்னகுமாா் தலைமையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறாா்கள்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், தேரோட்டத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேரோட்ட நாளில் 1,000-க்கும் மேற்பட்டபோலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனா். 3 ட்ரோன் கேமராக்கள், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்டகண் காணிப்பு கேமராக்கள் மூலம் கோயிலின் உள்புறமும், வெளிப்புற மும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒலிபெருக்கி, எச்சரிக்கை பலகைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நான்கு ரத வீதிகளிலும் 2 உயா் கண்காணிப்பு கோபுரங்களும், 16 காவல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மாநகர கட்டுப்பாட்டு அறை எண்களான 100, 0462-2562651, 9498101726 ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம் என்றனா்.
ற்ஸ்ப்06க்ங்ங்ல்ஹ
ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலையில் பல்லக்கில் வீதியுலா வந்த சுவாமிக்கு நடைபெற்ற தீபாராதனை.