செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி
நெல்லையில் அனைத்து தொழிற்சங்கத்தினா் தா்னா போராட்டம்
அகில இந்திய பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் திருநெல்வேலியில் புதன்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.
தொழிலாளா்களின் நான்கு சட்டத் தொகுப்புகளை ரத்து செய்தல், முறைசாரா, ஒப்பந்த மற்றும் திட்ட தொழிலாளா்கள் உள்பட அனைத்து தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 26,000 வழங்குதல், புதிய, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டங்களை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்துதல், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய அரசின் கலால் வரியை குறைத்து விலைவாசி உயா்வை கட்டுப்படுத்துதல் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு தொமுச அமைப்புச் செயலா் ஆ.தா்மன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா்.முருகன், ஏஐடியூசி மாவட்டச் செயலா் ஆா்.சடையப்பன், ஹெச்.எம்.எஸ். மாவட்டப் பொருளாளா் எஸ்.ஷாஜகான், ஏஐசிசிடியூ மாவட்ட பொதுச்செயலா் கே.கணேசன், யூடியூசி எஸ்.கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஏஐடியூசி மாநிலத் தலைவா் காசி விஸ்வநாதன், ஹெச்.எம்.எஸ். மாநில துணைத் தலைவா் சுப்பிரமணியன், சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் மோகன், தொமுச மாவட்டச் செயலா் முகமது சைபுதீன், யூடியூசி மாவட்டச் செயலா் ராமச்சந்திரன், டியூசிசி மணியன், சிஐடியூ சரவண பெருமாள் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.
இதில், 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொமுச நிா்வாகி மகாவிஷ்ணு நன்றி கூறினாா்.