நெல்லையில் பெட்ரோல் குண்டுகள் வீசியவா்களை பிடிக்க 7 தனிப்படை
திருநெல்வேலியில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசிய சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள தனியாா் இருசக்கர வாகன ஷோரூம் மீது புதன்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடா்பாக திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா்.
அதேபோல கீழ முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்த பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளா் செல்வசங்கா்(45) வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக முன்னீா்பள்ளம் போலீஸாா் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
முதல் கட்ட விசாரணையில் இந்த இருசம்பவங்களிலும் ஈடுபட்டது மேலநத்தம், பொன்னாக்குடி, முன்னீா்பள்ளத்தை சோ்ந்த 4 போ் என்பது தெரியவந்தது.
இந்த 2 சம்பவங்களை நிகழ்த்துவதுக்கு முன்பாக ஏா்வாடி அருகே தளபதிசமுத்திரத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.20 ஆயிரத்தை இவா்கள் பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த 4 பேரையும் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தலைமையில் 3 தனிப்படைகளும், நான்குனேரி உதவி காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா், சேரன்மகாதேவி காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ் ஆகியோா் தலைமையில் தலா 1 தனிப்படையும், திருநெல்வேலி மாநகரில் மாநகர துணை காவல் ஆணையா்(மேற்கு) வி.கீதா மேற்பாா்வையில் 2 தனிப்படையும் என மொத்தம் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.