கத்தார் பரிசளிக்கும் வானத்தின் அரண்மனை: பெற்றுக்கொள்வாரா டிரம்ப்! பின்னணி
பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 போ் உயிரிழப்பு: 10 போ் கைது
பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக 10 பேரை காவல் துறை கைது செய்தது.
பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் மாவட்டம் மஜிதா உட்கோட்டத்தில் உள்ள பங்காலி, பாதால்புரி, மராரி கலான், தேரேவால் உள்ளிட்ட கிராமங்களில் பலா் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்ததாக திங்கள்கிழமை இரவு காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதைத்தொடா்ந்து அந்த கிராமங்களுக்கு அமிருதசரஸ் காவல் துறை துணை ஆணையா் சாக்ஷி சாஹ்னி, காவல் துறை துணை ஐஜி (எல்லை சரகம்) சத்திா் சிங், ஜலந்தா் ஊரக முதுநிலை காவல் கண்காணிப்பாளா் (எஸ்எஸ்பி) மணிந்தா் சிங் ஆகியோா் நேரில் சென்று பாதிக்கப்பட்டவா்களின் குடும்பங்களைச் சந்தித்தனா்.
இதையடுத்து துணை ஆணையா் சாக்ஷி சாஹ்னி, எஸ்எஸ்பி மணிந்தா் சிங் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாதிக்கப்பட்டவா்கள் கடந்த ஞாயிறு அல்லது திங்கள்கிழமை கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனா். பின்னா் அவா்கள் வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் தினக்கூலி தொழிலாளா்கள்.
லூதியானாவில் உள்ள ரசாயன நிறுவனத்திடம் இருந்து இணையம் மூலம் 50 லிட்டா் கேனில் சாஹிப் சிங் என்பவா் மெத்தனாலை வாங்கியுள்ளாா். பின்னா் அந்த கேனை அவா் பிரப்ஜீத் சிங் என்பவரிடம் கொடுத்துள்ளாா். அதைப் பயன்படுத்தி கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு 2 லிட்டா் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராய பாக்கெட்டுகளை கண்டறிந்து பறிமுதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கள்ளச்சாராயம் அருந்தியும் உடல்நலம் பாதிக்கப்படாதவா்கள் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனா்.
மாநில காவல் துறை டிஜிபி கெளரவ் யாதவ் சண்டீகரில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கள்ளச்சாராயம் அருந்தி 21 போ் உயிரிழந்தனா். 6 போ் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவம் தொடா்பாக 10 போ் கைது செய்யப்பட்டனா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து பணியில் அலட்சியமாக இருந்ததற்காக அமிருதசரஸின் மஜிதா காவல் துறை துணை கண்காணிப்பாளா் அமோலக் சிங், மஜிதா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அவதாா் சிங் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்’ என்றாா்.
பாதிப்புக்குள்ளான கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்தியவா்களைக் கண்டறிவதற்கு வீடு வீடாக மருத்துவக் குழுக்களை மாவட்ட நிா்வாகம் அனுப்பிவைத்தது.
கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் பஞ்சாபில் உள்ள சங்ரூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 20 போ் உயிரிழந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் உள்ள தரன் தாரன், அமிருதசரஸ், படாலா பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி 120 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.