பஞ்சாப் வெள்ளம்: அரசுக்கு எதிராகப் பேசிய ஆளும் கட்சி எம்எல்ஏ! பழைய வழக்கில் கைது!
பஞ்சாப் வெள்ளம் குறித்து, ஆம் ஆத்மி அரசுக்கு எதிராகப் பேசிய ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஹர்மீத் சிங் பதான்மஜ்ரா, அவர் மீதான பழைய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாபின் சனோர் தொகுதியின், ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர் ஹர்மீத் சிங் பதான்மஜ்ரா. சமீபத்தில், அம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நீர்பாசனத் துறை செயலாளர் க்ரிஷன் குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் எனக் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமையைக் கண்டித்த அவர், வெள்ளத்திற்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டிருந்த விடியோவில், ஆம் ஆத்மி அரசு மக்களின் பேச்சைக் கேட்கவில்லை என்றால், 2027 சட்டப் பேரவைத் தேர்தலில் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம் என்றும், பஞ்சாப் அரசை தில்லியில் உள்ள ஆம் ஆத்மி தலைவர்கள் ஆட்சி செய்ய முயல்வதாகவும், அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், பதான்மஜ்ராவின் முன்னாள் மனைவி தொடர்புடைய, பழைய வழக்கில், அவர் இன்று (செப்.2) கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சட்டப் பேரவை உறுப்பினராக, அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை பஞ்சாப் அரசு நேற்று (செப்.1) திரும்ப பெற்றதாகவும், அரசுக்கு எதிராகப் பேசியதால் தன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடும் எனவும் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சிங்கப்பூர் பிரதமர் இந்தியா வருகை!