பட்டதாரி பெண்ணை வேட்டையாடிய சிறுத்தை - உடலை வாங்க மறுத்து போராட்டம்... வன கிராம மக்கள் சொல்வதென்ன?
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகிலுள்ள துருவம் கிராமத்தின் வனப்பகுதியையொட்டி வசித்து வந்த அஞ்சலி என்கிற பட்டதாரி இளம் பெண்ணை, நேற்று (டிசம்பர்-18) மாலை சிறுத்தை ஒன்று கொடூரமாக கடித்துக் கொன்றது.
அந்த வன கிராமத்திலேயே பட்டப்படிப்புப் படித்த ஒரு சிலரில், அஞ்சலியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் அருகே ஒதுங்கிய அவரை இரைதேடி வந்த சிறுத்தை வேட்டையாடி கொன்றிருக்கிறது. சிறுத்தையின் பிடியில் சிக்கி அஞ்சலி துடிதுடித்து இறந்துபோனதை விவரிக்க வார்த்தைகளில்லை. அவரின் இடது கையை கடித்து துண்டித்திருக்கிறது. முதுகுப் பகுதி உட்பட உடல் முழுவதுமே சதையை கிழித்துவிட்டு மீண்டும் காட்டுக்குள் ஓடி மறைந்துகொண்டது அந்தச் சிறுத்தை.
ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த அஞ்சலியைப் பார்த்து அந்த வன கிராமமே கதறி அழுதுகொண்டிருக்கிறது. இதையடுத்து, சிறுத்தையைப் பிடிப்பதற்காக துருவம் கிராமத்தில் 2 வனச்சரகர்கள் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் முகாமிட்டிருக்கின்றனர். டிரோன் கேமரா மூலமாகவும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உயிரிழந்த அஞ்சலியின் உடலுடன் உறவினர்கள் இன்று போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர்.
பிரேத பரிசோதனை முடிந்து ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்ட உடலைக் கிராமத்தின் நுழைவு வாயிலான ஆலமரத்துப் பகுதியில் மறித்து, சில நியாயமான கோரிக்கைகளையும் கிராம மக்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.
அதாவது, ``வன விலங்குகள் மற்றும் மனித மோதல்களை தடுக்க வேண்டும். வனப்பகுதியையொட்டி கிராமங்களில் சோலார் வசதி மூலமாக மின்வேலி அமைக்க வேண்டும்.
முறையான மின்சார வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். குறிப்பாக, எங்களின் நீண்ட கால கோரிக்கையான சாலை வசதியை விரைவாக செய்து தர வேண்டும். தற்போது உயிரிழந்த பட்டதாரி இளம்பெண், கழிவறை வசதி இல்லாத ஒரே காரணத்தினால்தான் அருகிலுள்ள மறைவான பகுதிக்குச் செல்ல நேர்ந்தது. எனவே, இங்கு வசிக்கும் அனைவரின் வீடுகளிலும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்று கண்ணீர் மல்க வலியுறுத்திருக்கின்றனர்.