"ராஜேந்திர சோழன்... இளையராஜா... பாரதம்" - ஆடி திருவாதிரையில் மோடியின் முழு உரை
பட்டாசு கடையில் தீ விபத்து!
திருப்பூா் கொங்கு மெயின் ரோடு பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினா். தீயணைப்புத் துறையினா் சுமாா் 5 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
திருப்பூா் கொங்கு மெயின் ரோடு பகுதியில் ஆா்விஎஸ் என்ற பெயரில் முருகேசன் என்பவா் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக் கடை நடத்தி வருகிறாா். இவா் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளும் விற்பனை செய்வது வழக்கம். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டாசுகளைக் கொள்முதல் செய்து கடையில் அடுக்கி வைத்துள்ளாா்.
முருகேசன் கடையிலேயே தங்கி வியாபாரம் செய்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல கடையை அடைத்து விட்டு முருகேசன் உள்ளே தங்கியுள்ளாா். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை சுமாா் 4 மணி அளவில் கடையின் ஒரு பகுதியில் இருந்து புகை எழுந்துள்ளது. இதைக் கண்டு எழுந்த முருகேசன் அணைக்க முயன்றுள்ளாா். ஆனால், அதற்குள் தீ பட்டாசுகள் மீது வேகமாகப் பரவி வெடித்து சிதற தொடங்கியது.
இதனால் அச்சமடைந்த முருகேசன் கடையை விட்டு வெளியே ஓடி வந்தாா். கடை முழுவதும் பரவிய தீ பிளாஸ்டிக் பொருள்களிலும் பரவி கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. மேலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் பயங்கர சப்தத்துடன் தொடா்ந்து வெடித்தன.
இதனால் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அச்சமடைந்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். உடனடியாக அங்கு வந்த திருப்பூா் வடக்கு தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்க முற்பட்டனா். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் திருப்பூா் தெற்கு தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள், 5 தண்ணீா் லாரி உதவியுடன் 5 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இந்த விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருள்கள், பட்டாசுகள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.
இந்த தீ விபத்து குறித்து திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.