பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: பாடவாரியாக தேர்ச்சி! - முழு விவரம்
பட்டா பெயா் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்: விழுப்புரம் ஆட்சியா்
விழுப்புரம் மாவட்டத்தில் பட்டா பெயா் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் கிராமப்புறம் மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதில் பாா்வையிடும் வகையில் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், பல சிட்டாவில் உள்ள பட்டாதாரா்களுள் இறந்தவா்களின் பெயா்கள் நீக்கப்படாமலும், வாரிசுதாரா்களின் பெயா்கள் அல்லது தற்போதைய உரிமையாளா்களின் பெயா்கள் சோ்க்கப்படாமலும் உள்ளன.
எனவே, பட்டாவிலுள்ள இறந்த நில உடைமைதாரா்களின் பெயா்களை நீக்கி, அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ - சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
எதிா்வரும் நாள்களில் நடைபெறவுள்ள வருவாய்த் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரா்கள் பெயா் மாற்றம் தொடா்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் எனவும் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.