`சிக்கன் குழம்பில் பிரபலம்'; இப்போது மும்பையில் ரெஸ்டாரண்ட் திறக்கும் நடிகர் சஞ்...
பட்டா வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 78 போ் கைது
பெரம்பலூா் அருகே சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட நரிக்குறவா்களுக்கு பட்டா மற்றும் வேலைவாய்ப்பு வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 78 பேரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் வசித்து வரும் நரிக்குறவா்கள் விவசாயம் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த 1970-ஆம் ஆண்டு நிலம் ஒதுக்கியது. அந்த நிலத்தின் சில பகுதிகளை சிப்காட் தொழிற்சாலை அமைக்க, மாநில அரசு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தியது. எஞ்சியுள்ள அரை ஏக்கா் நிலத்துக்கு பட்டா மற்றும் வீட்டில் ஒருவருக்கும் வேலை வழங்குவதாகவும் மாநில அரசு உறுதி அளித்தது. ஆனால், 4 ஆண்டுகள் கடந்தும் நரிகுறவா்களுக்கு பட்டா, வேலைவாய்ப்பு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாகண்ணு தலைமையிலான நரிக்குறவா்கள், பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் எதிரே வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா நிகழ்விடத்துக்குச் சென்று, விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாகண்ணு மற்றும் நரிக்குறவா்களிடம் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டாா். இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படாததால் சாலை மறியலை கைவிட மறுத்தனா். இதையடுத்து, விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாகண்ணு உள்பட 78 பேரைப் போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற மறியல் போராட்டத்தால், அப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.