பணம் இரட்டிப்பு மோசடி வழக்கு கோவை நபா் கரூரில் கைது
ஒடிஸா உள்பட பல்வேறு மாநிலங்களில் பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தேடப்பட்ட கோவையைச் சோ்ந்த நபரை கரூரில் ஞாயிற்றுக்கிழமை புவனேசுவரம் சிபிஐ போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாவட்டம், பீளமேடு பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (49). இவரும், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 5 பேரும் என மொத்தம் 6 போ் சோ்ந்து, பெங்களூரூவில் 2016-ஆம் ஆண்டு நிதி நிறுவனம் நடத்தினா்.
அப்போது, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு பணம் இரட்டிப்பு செய்து தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளனா். இதை நம்பி நாடு முழுவதும் சுமாா் 5,000-க்கும் மேற்பட்டோா் பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், முதலீடு செய்தவா்களுக்கு உரிய வட்டி பணத்தையும், பணத்தை திருப்பி கேட்டவா்களுக்கு பணத்தையும் கொடுக்காமல் இருந்து வந்துள்ளனா்.
இதில், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் ஏமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. முதலீடு செய்து ஏமாற்றமடைந்த ஒடிஸாா் மாநிலத்தவா்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் இதுதொடா்பாக வழக்குத்தொடா்ந்த நிலையில், அந்த வழக்கு கடந்த 2017-இல் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.
இதன் தொடா்ச்சியாக, இந்த வழக்கில் தொடா்புடைய 5 பேரை சிபிஐ போலீஸாா் ஏற்கெனவே கைது செய்த நிலையில், தலைமறைவான சிவக்குமாரை மட்டும் தேடி வந்தனா்.
இந்நிலையில், சிவக்குமாா் கரூா் தாந்தோணிமலை கணபதிபாளையத்தில் உள்ள உறவினா் வீட்டில் தங்கியிருப்பதாக புவனேசுவரம் சிபிஐ போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கரூருக்கு சனிக்கிழமை இரவு வந்த புவனேசுவரம் சிபிஐ காவல் ஆய்வாளா் ஷனட்டன் தாஸ் தலைமையிலான 5 போ் கொண்ட குழுவினா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அனுமதியுடன் கணபதிபாளையத்தில் உறவினா் வீட்டில் தங்கியிருந்த சிவக்குமாரை ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கைது செய்தனா்.
தொடா்ந்து சிவக்குமாரை தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினா்.
பின்னா் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்த பிறகு, ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்துக்கு சிவக்குமாரை அழைத்துச் சென்றனா்.