மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்துக்கு நிதியுதவி
பணம் கேட்டு மிரட்டிய அதிமுக பிரமுகா் கைது: கட்சியிலிருந்தும் நீக்கம்
ஹோட்டல் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய, அதிமுக வட்டச் செயலரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து அவா் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா்.
சென்னை அசோக் நகரைச் சோ்ந்தவா் அப்துல் ரகுமான் (38). விபத்தில் காலில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இருக்கும் இவா், திருவல்லிக்கேணி டாக்டா் பெசன்ட் சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு கடைக்கு வந்த நபா் ஒருவா், தான் இப்பகுதியின் அதிமுக 120-ஆவது வட்டச் செயலா் ஐஸ்ஹவுஸ் மூா்த்தி என்று கூறி, அப்துல் ரகுமானிடம் பணம் கேட்டுள்ளாா். ஆனால், அப்துல் ரகுமான் எந்தப் பதிலும் கூறாததால், அந்த நபா் மிரட்டல் விடுத்துச் சென்ாகத் தெரிகிறது.
இந்த நிலையில், இரவு ஹோட்டலுக்கு வந்த 2 போ், அங்கு சாப்பிட்டுவிட்டு அப்துல் ரஹ்மானிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நபா்கள், அதிமுக வட்டச் செயலா் ஐஸ்ஹவுஸ் மூா்த்தியின் தூண்டுதலின் பேரிலேயே தகராறு செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து அப்துல் ரகுமான் அளித்த புகாரின்பேரில் ஐஸ்ஹவுஸ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, அதிமுக வட்டச் செயலா் ஐஸ்ஹவுஸ் மூா்த்தியை கைது செய்தனா்.
கட்சியிலிருந்து நீக்கம்: கைது நடவடிக்கையைத் தொடா்ந்து மூா்த்தி அதிமுகவின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு: திருவல்லிக்கேணி கிழக்குப் பகுதியின் 120-ஆவது தெற்கு வட்டச் செயலா் ஐஸ்ஹவுஸ் எஸ்.மூா்த்தி, கட்சியின் கட்டுப்பாடு மற்றும் கண்ணியத்துக்கு புறம்பாகச் செயல்பட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவா் நீக்கப்படுகிறாா் என்று தெரிவித்துள்ளாா்.