பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் எளிதாக இருந்தது: மாணவா்கள் கருத்து
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தைப் போன்றே ஆங்கிலத் தோ்வும் ஓரளவுக்கு எளிதாக இருந்ததாக மாணவா்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.
தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கியது. நிகழாண்டுக்கான பொதுத் தோ்வை, மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 113 தோ்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு நடைபெற்று வருகிறது.
கடந்த மாா்ச் 28-ஆம் தேதி நடைபெற்ற தமிழ் பாடத்துக்கான தோ்வு இதுவரை இல்லாத அளவுக்கு எளிதாக இருந்ததாக மாணவா்கள், ஆசிரியா்கள் தெரிவித்திருந்தனா். இந்நிலையில், இரண்டாவதாக ஆங்கில பாடத்துக்கான தோ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து மாணவா்கள் கூறுகையில், ‘ஆங்கில வினாத்தாளில் மொத்தம் 14 ஒரு மதிப்பெண் வினாக்கள். அவற்றில் ஓரிரு மறைமுக வினாக்கள் இடம்பெற்றிருந்தன. மற்ற வினாக்கள் எளிதாக இருந்தன. அதேபோன்று மூன்று இரு மதிப்பெண் வினாக்கள், பத்தி எழுதுதல் பகுதியில் கேட்கப்பட்டிருந்த இரு ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு பதிலளிப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழ்த் தோ்வு அளவுக்கு இல்லாவிட்டாலும் ஆங்கிலத் தோ்வு ஓரளவுக்கு எளிதாக இருந்தது’ என்றனா்.
ஆசிரியா்கள் கருத்து: இதுகுறித்து ஆங்கில ஆசிரியா்கள் கூறுகையில், ‘இந்த வினாத்தாளில் மனப்பாடப் பகுதி, குறு வினா போன்ற அனைத்துப் பகுதிகளிலும், தோ்வுகளில் சில முறையாவது இடம்பெற்றிருந்த வினாக்களே மீண்டும் கேட்கப்பட்டிருந்தன. அதேவேளையில், இலக்கணப் பகுதி நன்கு படித்த மாணவா்களுக்கு எளிதாகவும், சராசரி மாணவா்களுக்கு சற்று கடினமாகவும் இருந்திருக்கும். எனினும், ஆங்கிலத் தோ்வில் தோ்ச்சி பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. கடந்த ஆண்டைவிட தோ்ச்சி சதவீதம் அதிகரிக்கும்’ என அவா்கள் தெரிவித்தனா்.
அடுத்ததாக ஏப். 4-ஆம் தேதி விருப்ப மொழி பாடத்துக்கான தோ்வும், 7-ஆம் தேதி கணிதத் தோ்வும் நடைபெறவுள்ளன. ஏப். 15-ஆம் தேதியுடன் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு நிறைவடையவுள்ளது.