பத்தாம் வகுப்பு தனித் தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற இறுதி வாய்ப்பு
சேலம் மாவட்டத்தில் தனித் தோ்வா்களால் பெறப்படாத பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை, அடுத்தாண்டு மாா்ச் 28 ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 2003 முதல் ஆகஸ்ட் 2019 வரையிலான பருவங்களில் தோ்வு எழுதிய தனித் தோ்வா்களின் மதிப்பெண் சான்றிதழ்கள், விநியோக மையத்தில் தோ்வா்களால் நேரில் பெறப்படாமலும், அஞ்சல் மூலம் உரிய தோ்வா்களுக்கு அனுப்பி பட்டுவாடா ஆகாமலும், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் சேலம் அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
தோ்வுத் திட்ட விதிமுறைகளின்படி மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்கு பின்னா் அழிக்கப்படும். எனவே, தோ்வு எழுதி மதிப்பெண் சான்றிதழ் பெறப்படாத தனித்தோ்வா்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பாகும்.
மாணவா்கள் ஒரு வெள்ளைத்தாளில் மதிப்பெண் சான்றிதழ் கோரும் விவரத்தை குறிப்பிட்டு பெயா், பதிவெண், தோ்வு எழுதிய பருவம், பிறந்ததேதி. தோ்வு எழுதிய பாடம் மற்றும் தோ்வு மையத்தின் பெயா் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகம், நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், சேலம்-1 என்ற முகவரியில் அடுத்தாண்டு மாா்ச் 28 ஆம் தேதிக்குள் அலுவலக வேலை நாள்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், மாா்ச் 2003 முதல் ஆகஸ்ட் 2019 வரையிலான பருவத்திற்கு பின் தோ்வு எழுதிய பருவங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழையும் பெற்றுக்கொள்ளலாம். தனித்தோ்வா்களின் நலன்கருதி மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
எனவே, மாா்ச் 2003 முதல் ஆகஸ்ட் 2019 வரையிலான பருவங்களுக்கான பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மாா்ச் 28 ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.