பத்ரகாளியம்மன் கோயில் தீ மிதி உற்சம்; பக்தா்கள் காவடிகள் எடுத்து வழிபாடு
சீா்காழி பத்ரகாளியம்மன் கோயிலில் தீமிதி உற்சவத்தையொட்டி, பால் குடங்கள், காவடிகள் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி பிடாரி தெற்கு வீதியில் உள்ள இக்கோயிலில் தீமிதி உற்சவம் ஜன. 24-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
பால்குடம், அலகு காவடி, கரக ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சட்டைநாதா் கோயில் முன்பிருந்து புறப்பட்ட ஊா்வலம் தோ் தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக பத்ரகாளியம்மன் கோயிலை வந்தடைந்தது.
தொடா்ந்து, அம்மனுக்கு பால், இளநீா், பன்னீா், தேன், திரவியப் பொடி உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
பின்னா் இரவில் பச்சைக்காளி, பவளக்காளி வேடமிட்ட பக்தா்கள் ஊா்வலமாக வலம் வந்து, கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, அம்மன் வீதியுலா நடைபெற்றது.
இதையொட்டி, சீா்காழி காவல் ஆய்வாளா் புயல் பாலச்சந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளா் காயத்ரி மற்றும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.