பனி மலையில் 10 நாள்களாக சிக்கிய இளைஞர் - டூத்பேஸ்ட் சாப்பிட்டு உயிரை காப்பாற்றிக் கொண்டது எப்படி?
பனிமலையில் பத்து நாள்களாக சிக்கிக்கொண்ட இளைஞர் ஒருவர், ஆற்று நீர், உருகிய பனி, டூத்பேஸ்ட் ஆகியவற்றை சாப்பிட்டு தன்னை உயிருடன் வைத்திருக்கிறார். எப்படி அந்த மலையில் மாட்டிக்கொண்டார், எப்படி மீட்கப்பட்டார் என்பது குறித்து பார்க்கலாம்..
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் அறிக்கையின்படி, சன் லியாங் என்பவர் தனது சோலோ பயணத்தை பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கி இருக்கிறார். அப்போது அவர் ஷான்சி மாகாணத்தின் 2500 மீட்டர் உயரத்திற்கு பெயர் பெற்ற குயின்லிங் மலைகளுக்கு நடைபயணம் மேற்கொண்டார்.

மலையேற்றம் தொடங்கிய இரண்டு நாட்களில் அவரது மின்னணு சாதனங்களில் பேட்டரி தீர்ந்து போனதால் அவர் தனது குடும்பத்தினருடன் ஆன தொடர்பை இழந்தார். தனிமைப்படுத்தப்பட்டு வெளி உலகத்தை தொடர்பு கொள்வதற்கான வழியையும் இழந்தார்.
இதனை அடுத்து அவர் காணாமல் போனதாக குடும்பத்தினர் நினைத்துள்ளனர். அந்த மலையில் நடைபயணம் மேற்கொண்டபோது அவர் பலமுறை விழுந்து அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக சன் லியாங் கூறியுள்ளார்.
காற்று மற்றும் குளிரில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள, ஒரு பெரிய பாறையின் பின்னால், காய்ந்த புல் மற்றும் இலைகளின் உதவியுடன் தனக்கென ஒரு படுக்கையைத் தயார் செய்திருக்கிறார். சாப்பிட உணவு கிடைக்காததால், தன்னிடம் இருந்த டூத்பேஸ்டை சாப்பிட்டு, ஆற்றில் உள்ள தண்ணீரையும் உருகிய பனியையும் குடித்து உயிரை காப்பாற்றிக் கொண்டதாகவும் சன் கூறினார்.
அவரின்குடும்பத்தினர் மீட்புக் குழுவை அணுகிய பிறகு, தேடுதல் ஆபரேஷன் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 17 அன்று, நெருப்பு மூட்டும்போது, ஏற்பட்ட புகையை வைத்து தேடுதல் குழுவின் கவனத்தை பெற்றார்.
”இந்தப் பாதையில் நடைபயணம் மேற்கொண்டால் கரடிகள், மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட ஆபத்தான வனவிலங்குகளை மலையேற்றம் செய்பவர்கள் எதிர்கொள்ள நேரிடும். இந்த நடவடிக்கையின் போது எங்கள் மீட்புப் பணியாளர்களில் சிலர் காயமடைந்தனர்” என்று மீட்புக் குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறினார்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக, இந்த ஆபத்தான பாதையில் 50க்கும் மேற்பட்ட மலையேறுபவர்கள் காணாமல் போயுள்ளனர் அல்லது உயிரிழந்துள்ளனர் என அவர்கள் கூறினர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
