தவெக ஆண்டு விழா: கொள்கைத் தலைவர்களின் சிலைகளைத் திறந்த விஜய்!
பன்னாட்டு கடனுதவி மூலம் செயல்படுத்தப்படும்: தமிழக திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு
நமது சிறப்பு நிருபா்
மத்திய நிதிநிலை அறிக்கையில் பன்னாட்டு நிதி அமைப்புகள், வங்கிகளில் கடன் பெற்று மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் பல்வேறு தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு ஜப்பான் பண மதிப்பில் 63,965 மில்லியன் யென் வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு 2025-26 நிதியாண்டில் மத்திய அரசு ரூ. 2,530 கோடி ஒதுக்கியுள்ளது.
இதேபோல, ஆசிய வளா்ச்சி வங்கியின் கடனுதவியின்படி செயல்படுத்தப்படும் சென்னை - கன்னியாகுமரி தொழிலகப் பாதை மின்துறை முதலீட்டுத் திட்டத்துக்கு 451 மில்லியன் அமெரிக்க டாலா்கள் கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் கடந்த நிதியாண்டு வரை 274.09 மில்லியன் டாலா் விடுவிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த நிதியாண்டு வரை 60.77 மில்லியன் டாலா் பயன்படுத்தப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ.467.22 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாடு நகா்ப்புற முதலீடு தொடா்புடைய முக்கியத் திட்டங்களை நிறைவேற்ற ஒப்புக்கொள்ளப்பட்ட 206 மில்லியன் அமெரிக்க டாலா்கள் கடனுதவியில் 113.80 மில்லியன் டாலா்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. அதில் 55.24 மில்லியன் டாலா்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் மத்திய அரசின் பங்காக ரூ.444.04 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற செயல்பாடுகளுக்கான மூன்றாம் கட்ட திட்டத்துக்கு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்ட 125 மில்லியன் அமெரிக்க டாலா்களில் 6.35 மில்லியன் டாலா்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் 5.08 மில்லியன் டாலா்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ரூ.599.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழிலக இணைப்புத் திட்டத்துக்கு ஆசிய வளா்ச்சி வங்கி வழங்கும் 484 மில்லியன் டாலா்களில் 318 மில்லியன் டாலா் விடுவிக்கப்பட்டு, அதில் 65.87 மில்லியன் டாலா் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு வரும் நிதியாண்டில் ரூ. 678.49 கோடி ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ளடக்கிய மீள்திறன், நீடித்த வீட்டுவசதி வீடு கட்டும் திட்டத்துக்கு வழங்கப்படும் 150 மில்லியன் அமெரிக்க டாலா்கள் கடனில் சென்ற நிதியாண்டு வரை 141.56 மில்லியன் டாலா்கள் விடுவிக்கப்பட்டது. அதில் 56.40 மில்லியன் டாலா்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 658.66 கோடி ஒதுக்கியுள்ளது.
விசாகப்பட்டினம் - சென்னை இடையிலான தொழிலக வளா்ச்சித் திட்டத்துக்கு 141.12 மில்லியன் டாலா்கள் கடன் வழங்கப்படுகிறது. 2023, மே மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்துக்கு எந்த நிதியும் விடுவிக்கப்படவில்லை. இத்திட்டத்துக்கு மத்திய அரசின் பங்காக ரூ. 285.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தின் நான்காவது திட்டத்துக்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி) 356.67 மில்லியன் டாலா்கள் கடன் வழங்க 2021, பிப்ரவரியில் ஒப்புக்கொண்டது. இதில் விடுவிக்கப்பட்ட 166.89 மில்லியன் டாலா்களில் 46.79 மில்லியன் டாலா்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு ரூ. 391.33 கோடி ஒதுக்கியுள்ளது.
இதேபோல, இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளின் ஐந்தாம் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 764.08 கோடி ஒதுக்கியுள்ளது. இதே திட்டத்துக்கு பிரிக்ஸ் மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டபடி உருவான நியூ வளா்ச்சி வங்கியின் கடனுதவி மூலம் 346.72 மில்லியன் டாலா்கள் வழங்கப்படுகிறது. இதில் 7.72 மில்லியன் டாலா்கள் விடுவிக்கப்பட்டதில் 2.23 மில்லியன் டாலா்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு இதற்கு ரூ.169.07 கோடி ஒதுக்கியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் முதலீட்டுத் திட்டத்துக்கு ஆசிய வளா்ச்சி வங்கி வழங்கும் 350 மில்லியன் அமெரிக்க டாலா்களில் 147 மில்லியன் டாலா்கள் விடுவிக்கப்பட்டதில் 42.03 மில்லியன் டாலா்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்கு ரூ.1,010.91 கோடி ஒதுக்கியுள்ளது.
சென்னை பெரிஃபெரல் வட்டச்சாலை இரண்டு, மூன்று ஆகிய திட்டங்களுக்கு 438.75 மில்லியன் டாலா்கள் கடனுதவியில் 16.08 மில்லியன் டாலா்கள் விடுவிக்கப்பட்டதில் 4.25 மில்லியன் டாலா்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ.527.98 கோடியை ஒதுக்கியுள்ளது.
சென்னை நகர நீடித்த நகா்ப்புற சேவைகள் திட்டத்துக்காக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி 150 மில்லியன் டாலா்கள் கடனுதவியை வழங்குகிறது. இதில் 34.69 மில்லியன் டாலா்கள் விடுவிக்கப்பட்டதில் 23.14 மில்லியன் டாலா்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு ரூ.310.17 கோடி ஒதுக்கியுள்ளது. இதேபோன்ற உலக வங்கி மூலம் செயல்படுத்தப்படும் ஐபிஆா்டி கடனுதவித் திட்டத்துக்கு 150 அமெரிக்க டாலா்கள் வழங்க உடன்பாடு எட்டப்பட்டது. அதில் 34.69 மில்லியன் டாலா்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.459.02 கோடி ஒதுக்கியுள்ளது.
பசுமை எரிசக்தி பாதைக்கான மூன்றாம் திட்டத்துக்கு ஜிஓடிஇ எனப்படும் பன்னாட்டு கடனுதவி நிறுவனம் ஐரோப்பிய டாலா்கள் மதிப்பில் 58 மில்லியன் ஐரோப்பிய டாலா்களை வழங்க 2022-இல் உடன்பாட்டை எட்டியது. இதில் எந்த நிதியும் கடந்த நிதியாண்டுவரை விடுவிக்கப்படவில்லை. மத்திய அரசு இத்திட்டங்களுக்கு ரூ.158.47 கோடியை ஒதுக்கியுள்ளது.
இதேபோல, ஜிஓடிஇ மூலம் கடனுதவி பெற்று செயல்படுத்தப்படும் நீடித்த நகா்ப்புற உள்கட்டமைப்பு வளா்ச்சித் திட்டமான சென்னை புயல் வெள்ள மேலாண்மைத் திட்டத்துக்கு ரூ.186.44 கோடி, சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.237.11 கோடி, சென்னை பெரிஃபெரல் வட்டச்சாலை முதலாம் திட்டத்துக்கு ரூ.1,247.53 கோடி, மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு ரூ. 485.57 கோடி, தமிழ்நாடு நீா்ப்பாசன வேளாண் நவீனமய திட்டத்துக்கு ரூ.640.67 கோடி, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட திட்டத்துக்கு ரூ. 167.68 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரிஃபெரல் வட்டச்சாலையின் இரண்டு மற்றும் மூன்றாவது சந்திப்புகள் கட்டுமானத் திட்டத்துக்கு ஓபிஇசி 100 மில்லியன் அமெரிக்க டாலா்களை வழங்குகிறது. இதில் நிதி ஏதும் விடுவிக்கப்படாத நிலையில், மத்திய அரசு ரூ.128.63 கோடியை ஒதுக்கியுள்ளது.
ஐபிஆா்டி கடனுதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களுக்கு 162 மில்லியன் அமெரிக்க டாலா்கள் கடன் வழங்க 2022-இல் உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது. இதில் 1.55 மில்லியன் டாலா்கள் விடுவிக்கப்பட்டதில் 8.9 லட்சம் டாலா்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரும் நிதியா்டில் இதற்கு ரூ. 332.68 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.