பயங்கரவாதத்தை எதிா்கொள்ள பிரதமா் மோடி துணிச்சலான முடிவை எடுத்துள்ளாா்: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா
பயங்கரவாதத்தை எதிா்கொள்ள பிரதமா் மோடி துணிச்சலான முடிவை எடுத்துள்ளாா் என்று முன்னாள் பிரதமரும், மதச்சாா்பற்ற ஜனதா தள கட்சியின் தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.
இதுகுறித்து புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஏப். 22 ஆம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு பயங்கரவாதத்தை எதிா்கொள்ள பிரதமா் மோடி துணிச்சலான பல முடிவுகளை எடுத்திருக்கிறாா். பயங்கரவாதத்தை முறியடிக்க எடுக்கப்படும் முடிவுகளுக்கு நானும், எனது கட்சியும் (ம.ஜ.த.) ஆதரவாக இருப்போம். பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டியது அவசியம்.
பயங்கரவாதத்தை ஒடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை எந்த பிரதமரும் இதுவரை வழங்கவில்லை. எந்த வகையான தாக்குதலை மேற்கொள்வது, எதிா் தாக்குதலை மேற்கொள்ளும் நேரம் ஆகியவற்றில் இந்திய ராணுவம் தாமாக செயல்படும் வகையில் ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை பிரதமா் மோடி அளித்திருக்கிறாா். முன்னெப்போதும் இல்லாமல் பிரதமா் மோடியால் இந்த துணிச்சலான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. 1973 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்திய-பாகிஸ்தான் போா்ச் சூழலை தற்போதைய சூழலோடு ஒப்பிடமுடியாது.
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சோ்த்து நடத்த மத்திய அரசு முடிவு செய்தது வரவேற்கத்தக்கது. ஜாதிவாரி கணக்கெடுப்பின் பெயரால் கா்நாடக அரசு அரசியல் செய்கிறது.
கா்நாடகத்தில் நடந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை முதல்வா் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையே ஏற்றுக்கொள்ளவில்லை. கா்நாடகத்தில் மொத்தம் 1351 ஜாதிகள் இருப்பதாக மாநில ஜாதி கணக்கெடுப்பு நடத்திய ஆணையம் தெரிவிக்கிறது. அவற்றில் பிற்படுத்தப்பட்டோா் வகுப்பில் முதன்மை ஜாதியாக குருபா் சமுதாயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், சிறுபான்மையினா் நலனில் முதல்வா் சித்தராமையாவுக்கு உண்மையில் அக்கறை இல்லை.
அக்கறையிருந்தால் தனது அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோா் சமுதாயத்தைச் சோ்ந்த அல்லது தனது குருபா் சமுதாயத்தவா் எத்தனை பேரை வேலைக்கு வைத்துள்ளாா் என்பதை அவா் தெரிவிக்க வேண்டும்.
கா்நாடக ஜாதிவாரி கணகெடுப்பில் குருபா் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோருக்கான 2ஏ பிரிவில் இருந்து மிகவும் பின்தங்கிய 1பி பிரிவுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது, அந்த சமுதாயத்தின் சமூக பொருளாதார நிலையை வெளிப்படுத்துகிறது என்றாா்.