பயங்கரவாத அச்சுறுத்தல்: லண்டனில் ஈரானைச் சேர்ந்த பலர் கைது!
லண்டனில் தாக்குதல் நடத்தவிருந்ததாக ஈரான் நாட்டைச் சேர்ந்த பலரை இங்கிலாந்து பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.
லண்டனில் பெயர் குறிப்பிடப்படாத இடத்தில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து இங்கிலாந்து காவல் துறை தெரிவித்துள்ளதாவது,
லண்டனில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட முயன்றதாக ஈரானைச் சேர்ந்த 5 பேர் சனிக்கிழமை (மே 3) கைது செய்யப்பட்டனர். இவர்களின் வயது 29 - 45க்குள் இருக்கும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதேபோன்று ஈரான் குடியுரிமை வைத்திருந்த மேலும் 4 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்தது.
இதோடுமட்டுமின்றி, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக லண்டனில் சுற்றித்திரிந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த 39, 44 மற்றும் 55 வயதுடைய மேலும் மூவரை இன்று கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இவர்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் குறிப்பிடப்படாத இடத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியிருந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டை பாதுகாக்கும் வகையில் காவல் துறை மற்றும் உளவு அமைப்புகள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.