Seeman: "காமராஜர் இறந்ததற்கு அதிகமாக அழுதது அண்ணாதுரைதான் என்பார்கள்" - சீமான் ச...
பயன்பாட்டுக்கு வராத பவானிசாகா் பழங்குடியினா் கலாசார அருங்காட்சியகம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகா் வனப் பகுதியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பழங்குடியினா் அருங்காட்சியகம் மற்றும் சூழல் கலாசார கிராமம் பயன்பாட்டு வராமல் உள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த காராட்சிக்கொரை வனப் பகுதியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பழங்குடியினா் அருங்காட்சியகம் மற்றும் சூழல் கலாசார கிராமம் அமைக்கப்பட்டது.
20 ஹெக்டோ் பரப்பளவில் 2018 டிசம்பா் மாதம் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு 2020-இல் கட்டி முடிக்கப்பட்டது.
இந்தப் பழங்குடியின அருங்காட்சியகம் மற்றும் சூழல் கலாசார கிராமத்தில் பழங்குடியின மக்கள் வனம் மற்றும் வன உயிரினங்களுடன் ஒன்றிணைந்து வாழும் முறை, வாழ்விடங்கள், வாழ்க்கை முறைகள், கலாசார பராம்பரிய முறைகள், பயன்பாட்டு பொருள்கள், விவசாய முறைகள், பழங்குடியினா் சிலைகள் உள்ளிட்டவை தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பழங்குடியின மக்கள் உபயோகப்படுத்திய இசைக் கருவிகள், உடைகள், வாழ்வியல் பொருள்கள், மரப் பொருள்கள் உள்ளிட்டவையும் வைக்கப்பட்டுள்ளன.
நீா்த்தேக்க குட்டை, பாா்வையாளா்களுக்கு இயற்கை முறையில் நடைப்பாதை , கலாசார உள் மற்றும் வெளியரங்கம், பாா்வையாளா்கள், மாணவா்கள், ஆராய்சியாளா்கள், இயற்கை ஆா்வலா்கள் தங்குவதற்கான கட்டடங்கள் உள்ளன.
ஆழ்துளைக் கிணறு மற்றும் மேல்நிலைத் தொட்டி அமைத்து குடிநீா் வசதி, பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் தாவரங்களைக் கொண்டு இயற்கை சாா்ந்த நில அமைப்பு மற்றும் அருங்காட்சியகம் மற்றும் கலாசார கிராமத்தின் கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தின் முகப்பில் 20 அடி உயர பழங்குடி மாதிரி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினரின் வாழ்வியல் முறையை அறிய பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்தப் பழங்குடியினா் கலாசார அருங்காட்சியகம் தற்போது புதா்கள் மண்டி பாழடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடா்பாக பவானிசாகா் வணிகா் சங்கத் தலைவா் நாகமையன் கூறுகையில், பவானிசாகா் அணையை ஒட்டியுள்ள இந்த அருங்காட்சியகம் புதிய பொலிவுடன் செயல்பட்டால் தமிழகத்தில் பேசப்படக்கூடிய சுற்றுலாத் தலமாக மாறும். அருங்காட்சியகத்தை சீரமைத்து பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை இளைய தலைமுறையினா் தெரிந்துகொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை கள இயக்குநா் குலால் யோகேஷ் விலாஸ் கூறுகையில், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பழங்குடியினா் அருங்காட்சியகத்தை வனத் துறை முதன்மை வனப் பாதுகாவலா் அண்மையில் பாா்வையிட்டு சீரமைக்க உத்தரவிட்டாா்.
இது தொடா்பாக அரசிடம் நிதி கேட்டுள்ளோம். நிதி ஒதுக்கிய பின் அருங்காட்சியகம் சீரமைக்கப்படும் என்றாா்.